கோமள விலாஸ் இருந்த இடத்தில் இனி இ‌ஷ்தாரா

கோமள விலாஸ் இருந்த இடத்தில் இனி இ‌ஷ்தாரா

1 of 2
கோப்புப் படம்: பிஸ்னஸ் டைம்ஸ்
கோப்புப் படம்: தமிழ் முரசு

02 Oct 2026 - 7:00 am

2 mins read

பிரபல நகைக்கடையான இ‌ஷ்தாரா ஜூவல்லரி தனது வணிகத்தை விரிவுபடுத்துகிறது.

அந்நிறுவனம் சிங்கப்பூரில் தனது இரண்டாவது கடையை சிராங்கூன் சாலையில் முன்பு கோமள விலாஸ் உணவகம் இருந்த இடத்தில் திறக்கத் திட்டமிட்டுள்ளது. தீபாவளிக் காலத்தில் அதனைச் செய்ய இ‌ஷ்தாரா எண்ணம் கொண்டுள்ளது.

இவ்வாண்டு தீபாவளிப் பண்டிகை வரும் நவம்பர் மாதம் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொதுவாக, அதற்கு ஏறத்தாழ ஒரு மாதத்துக்கு முன்பிருந்து லிட்டில் இந்தியா வட்டாரத்தில் நகைகள், பட்டுச் சேலைகள் போன்ற முக்கியப் பொருள்களின் விற்பனை சூடுபிடிப்பதுண்டு.

எண் 111 சிராங்கூன் சாலையில் தற்போது உள்ள இ‌ஷ்தாரா கடை, 22 காரட் தங்க நகைகளுக்கும் வைர நகைகளுக்கும் பிரபலமாக இருந்துவருகிறது. கோமள விலாஸ் முன்பு இருந்த இடம் 76-78 சிராங்கூன் சாலையாகும்.

இதுகுறித்துப் பேசிய இ‌ஷ்தாரா உரிமையாளர் பார்த்திபன் முருகையன், “இ‌ஷ்தாராவின் வணிகத்தை விரிவுபடுத்தவேண்டும் என எண்ணியிருந்தேன். அதற்கென இவ்விடம் கிடைத்தது எங்களின் அதிர்‌ஷ்டம்.

“சிறப்பான மரபைக் கொண்டிருந்த, சிங்கப்பூரர்கள் பலரின் மனத்தில் தனிச்சிறப்புமிக்க இந்த இடத்தை மங்களகரமான ஒன்றாக நான் கருதுகிறேன். இந்த வணிக விரிவாக்கம், லிட்டில் இந்தியாவின் முக்கியப் பகுதியில் எங்களின் இடத்தை மறுவுறுதிப்படுத்துகிறது. இதன்மூலம் மேலும் பெரிய அளவில் எங்களால் வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்ற முடியும்,” என்று பெருமைப்பட்டார்.

இ‌ஷ்தாரா, அதற்குச் சொந்தமான லுவீனஸ் ஜுவல்லரி ஆகியவை சிங்கப்பூரிலும் ஹாங்காங்கிலும் தற்போது மொத்தம் ஒன்பது கடைகளை நடத்துகின்றன. கோமள விலாஸ் இருந்த இடத்தில் திறக்கப்படவுள்ள கடை அவற்றில் ஒன்றன்று.

அந்தக் கடைகளில் எட்டு, லுவீனஸ் ஜுவல்லரி கடைகளாகும்.

அண்மையில் நடந்தேறிய சாங்கி வாடகைதாரர் விருதுகள் 2026 நிகழ்ச்சியில், லுவீனசுக்கு முன்னணி இணையவழி சில்லறை விற்பனையாளர் வளர்ச்சி விருது (Top Online Retail Tenant Growth Award) வழங்கப்பட்டது. அது, கடந்த 14 ஆண்டுகளில் லுவீனஸ், சாங்கி விமான நிலையக் குழுமத்திடமிருந்து பெற்ற மூன்றாவது விருதாகும்.

செய்தி: அப்துல் ஹாதி
குறிப்புச் சொற்கள்