ஜெருசலம்: காஸா போரை முடிவுக்குக் கொண்டு வர இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் ஒப்புக்கொண்டு உள்ளன. அது தொடர்பான பேச்சுவார்த்தையில் அவை இரண்டுக்கும் இடையில் போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டு உள்ளது.
அந்த உடன்பாடு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) நடப்புக்கு வரும் என்றும் 15 மாத போர் காலத்தில் பிணை பிடிக்கப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த உடன்பாட்டின் மூலம் 15 மாதங்களாக மத்திய கிழக்கில் பரவிய பதற்றம் ஒரு முடிவுக்கு வருகிறது.
காஸா வட்டாரத்தைச் சீர்குலைத்த ரத்தக்களறிக்கும் விடைகொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போர்நிறுத்தம் ஜனவரி 19ஆம் தேதி நடப்புக்கு வரும் என்ற அறிவிப்பை கத்தார் பிரதமர் ஷேக் முஹம்மது அப்துல் ரஹ்மான் அல் தானி தலைநகர் தோஹாவில் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட இஸ்ரேல், ஹமாஸ் பிரதிநிதிகள் போர்நிறுத்த உடன்பாட்டை அமல்படுத்த ஒப்புக்கொண்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.
போர்நிறுத்த உடன்பாட்டை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்று உள்ளார்.
“பாலஸ்தீனக் குடிமக்களுக்கான மனிதாபிமான உதவிகளைத் தொடரும் வகையில் காஸாவில் சண்டையை நிறுத்த உடன்பாடு உதவிபுரியும்.
தொடர்புடைய செய்திகள்
“மேலும், 15 மாதங்களாக குடும்பத்தினரைப் பிரிந்து தவிக்கும் பிணைக் கைதிகளும் தங்களது அன்புக்குரியவர்களுடன் மீண்டும் இணைய அது வழிவகுக்கும்,” என்று வாஷிங்டன்னில் திரு பைடன் கூறினார்.
இதற்கிடையே, போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டு இருந்தபோதிலும் புதன்கிழமை (ஜனவரி 15) இஸ்ரேலிய வான்படை காஸாவில் தாக்குதல் நடத்தியதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் கூறினர்.
காஸா நகரத்திலும் அதன் வடக்குப் பகுதியிலும் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தபட்சம் 32 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ ஊழியர்கள் தெரிவித்தனர்.
2023 அக்டோபர் 7 முதல் நீடித்த போரில் காஸாவில் 46,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் கூறி உள்ளனர்.
ஜனவரி 19ஆம் தேதி போர்நிறுத்தம் நடப்புக்கு வருமுன்னர் இஸ்ரேலிய, ஹமாஸ் தரப்பினர் பகைமையைக் கைவிட்டு அமைதிக்குத் திரும்புவதற்கான முயற்சிகளில் நடுநிலையாளர்கள் ஈடுபட்டதாக பாலஸ்தீன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உடன்பாட்டின்கீழ், ஹமாஸ் படையினர் பிடித்து வைத்துள்ள இஸ்ரேலிய வீரர்களும் இஸ்ரேலிய ராணுவம் சிறை வைத்துள்ள பாலஸ்தீனர்களும் விடுவிக்கப்படுவார்கள்.
இந்நிலையில், போர்நிறுத்த உடன்பாட்டை அறிந்த பாலஸ்தீனக் குடிமக்கள் காஸா வீதிகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு உணவு, குடிநீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தங்குவதற்கு இடமில்லாமலும் வாகனங்களுக்கு எரிபொருள் இல்லாமலும் அங்குள்ள மக்கள் தவித்து வருகின்றனர். அந்தத் தவிப்பு இனி விடைபெறும் என்று பாலஸ்தீனர்கள் நம்புகின்றனர்.
போர் நிறுத்தம் குறித்து ஊடகத்தினரிடம் பேசிய காடா என்னும் ஒற்றைப் பெயர் கொண்ட பெண்மனி, என் கண்களில் நீர் வடிகிறது. அது ஆனந்தக் கண்ணீர். நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார் ஐந்து பிள்ளைகளைப் பிரிந்து வாடும் அந்தப் பெண்.
இஸ்ரேல் அமைச்சரவையின் ஒப்புதல் எதிர்பார்ப்பு
உடன்பாட்டுக்கு ஒப்புக்கொண்டாலும் அது தனது அரசாங்கத்தாலும் பாதுகாப்பு அமைச்சரவையாலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று இஸ்ரேல் அறிவித்து உள்ளது. போர்நிறுத்த உடன்பாட்டின் மீது இஸ்ரேலிய அமைச்சரவையில் வியாழக்கிழமை (ஜனவரி 16) வாக்கெடுப்பு நடைபெறும் என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் கூறினார்.
இஸ்ரேலிய கூட்டணி ஆட்சியில் சில எதிர்ப்புகள் இருப்பினும் உடன்பாட்டுக்கு ஆதரவான வாக்கெடுப்பு வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் பைடனையும் அதிபராகப் பதவி ஏற்க இருக்கும் டோனல்ட் டிரம்ப்பையும் அழைத்து நன்றி தெரிவித்த இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, விரைவில் வாஷிங்டன் வர இருப்பதாகக் கூறினார். இதனை அவரது அலுவலகம் தெரிவித்தது.
இதற்கிடையே, போர்நிறுத்த உடன்பாட்டை தனது சமூக ஊடகத்தளம் வாயிலாக அறிவித்த ஹமாஸ், ‘இது ஒரு திருப்புமுனை’ என்று கூறியது.