மேற்குக்கரையில் உள்ள இஸ்ரேலியக் குடியேற்றங்கள் சட்டவிரோதமானவை: சிங்கப்பூர்

மேற்குக்கரையில் உள்ள இஸ்ரேலியக் குடியேற்றங்கள் சட்டவிரோதமானவை: சிங்கப்பூர்

2 mins read
054703be-2094-47e6-b096-75e58e09738f
இ1 குடியேற்றத் திட்டத்தைக் காட்டும் வரைபடத்தை இஸ்ரேலிய நிதி அமைச்சர் பெஸாலெல் ஸ்மோட்ரிச்சும் இன்னொரு பெண்ணும் பிடித்திருக்கும் காட்சி. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

மேற்குக்கரையில் உள்ள இஸ்ரேலியக் குடியேற்றங்கள் அனைத்துலகச் சட்டத்தின்கீழ் சட்டவிரோதமானவை என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

விரிவாக்கத் திட்டங்களை நிறுத்துமாறு அது இஸ்ரேலைக் கேட்டுக்கொண்டது.

‘இ1’ அல்லது ‘ஈஸ்ட் 1’ பகுதியில் குடியேற்றங்களை விரிவாக்கும் திட்டத்தின்கீழ், 1,200க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளியை இஸ்ரேலிய அரசாங்கம் இம்மாதம் 18ஆம் தேதி வெளியிட்டிருந்தது.

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலத்திற்குக் கிழக்கே அமைந்துள்ள மேற்குக்கரையின் ஒரு பகுதியை ‘இ1’ என இஸ்ரேல் குறிப்பிடுகிறது.

முன்மொழியப்பட்டுள்ள இந்தக் கட்டுமானம், மேற்குக் கரையை மேலும் பிளவுபடுத்தும் என்றும் உத்தேச ‘இரு-நாடுகள் தீர்வுக்கான’ வாய்ப்புகளைக் கடுமையாகப் பாதிக்கும் என்றும் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

“இந்தக் குடியேற்ற விரிவாக்கத் திட்டங்களை நிறுத்துமாறு இஸ்ரேலிய அரசாங்கத்தைச் சிங்கப்பூர் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது,” என்று அவர் சொன்னார்.

‘இ1’ பகுதியில் கிட்டத்தட்ட 3,700 பாலஸ்தீனர்கள் வசிப்பதாகக் கூறப்படுகிறது.

மேற்குக்கரையில் பாலஸ்தீனப் பொதுமக்களுக்கு எதிராகக் குடியேறிகள் நடத்தும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்திருப்பது குறித்தும் சிங்கப்பூர் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

“இத்தகைய வன்முறைகளைத் தடுக்கவும் அவற்றுக்குப் பொறுப்பானவர்களைத் தண்டித்து நடவடிக்கை எடுக்குமாறும் இஸ்ரேலிய அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்றார் அவர்.

ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றத்தின் தீர்மானங்களுக்கு ஏற்ப, பேச்சின் மூலம் எட்டப்படும் இரு-நாடுகள் தீர்வே இஸ்ரேலிய-பாலஸ்தீன மோதலில் முழுமையான, நேர்மையான, நிலையான அமைதிக்கு இட்டுச்செல்லும் ஒரே சாத்தியமான வழி என்பதைச் சிங்கப்பூர் மீண்டும் சுட்டிக்காட்டியது.

2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி காசா வட்டாரத்திலிருந்து ஹமாஸ் குழு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் தொடங்கியது. அதன் பின்னர், 73,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் மாண்டதாக அங்குள்ள சுகாதாரத் துறை அதிகாரிகளின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

அதே காலகட்டத்தில் 2,039க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்இஸ்ரேல்மத்திய கிழக்குவிரிவாக்கம்திட்டம்அழைப்பு