சிங்கப்பூரில் தனிநபரின் முக்கிய அடையாளமான தேசிய அடையாள அட்டை எண்கள் வெளிப்படையாகத் தெரிந்த விவகாரத்தை அரசாங்கச் சேவைத் தலைவரான லியோ யிப் தலைமையிலான குழு ஆராயவிருக்கிறது.
அக்ரா எனப்படும் கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையத்தின்கீழ் இயங்கும் பிஸ்ஃபைல் வர்த்தக இணையத் தளம் தொடங்கப்பட்டபோது அதன் பொதுத் தேடல் செயல்பாட்டில் அடையாள அட்டை எண்கள் மறைக்கப்படாமல் வெளியானது.
அடையாள அட்டை எண்களைப் பொறுப்பாகப் பயன்படுத்தும் அரசாங்கக் கொள்கை குறித்து குழு மறுபரிசீலனை செய்யும். அதுமட்டுமல்லாமல் டிசம்பரில் அக்ரா பொதுத் தேடல் செயல்பாட்டின் மூலமாக அடையாள அட்டை எண்கள் வெளிப்படையாக தெரிந்தது குறித்தும் அது ஆராயும். இதற்கான குழுவின் பணிகள் பிப்ரவரியில் முடிவடையும். அப்போது குழுவின் கண்டுபிடிப்புகள் பொதுமக்களுக்கு வெளியிடப்படும்.
“இரு அம்சங்களிலும் என்ன நடந்தது, இதில் எப்படி முடிவு எடுக்கப்பட்டது, அமலாக்க மற்றும் தொடர்பு நடைமுறைகள், பொதுச்சேவை அமைப்புகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு, இதில் அரசாங்கம் என்ன செய்திருக்கலாம், இன்னும் சிறப்பாக செய்யக்கூடிய நடவடிக்கைகள் என்ன போன்றவற்றை குழு ஆராயும்,” என்று புதன்கிழமை (ஜனவரி 8) அன்று நாடாளுமன்றத்தில் இரண்டாம் நிதி அமைச்சரான இந்திராணி ராஜா தெரிவித்தார்.
பிஸ்ஃபைல் இலவச பொதுத் தேடல் தளத்தில் டிசம்பர் 9 முதல் டிசம்பர் 13 வரை சில சிங்கப்பூரர்களின் அடையாள அட்டை எண்கள் வெளிப்படையாகப் பார்க்க முடிந்தது. தனிநபர் அடையாள எண் தெரிந்ததால் பொதுமக்கள் கவலை அடைந்தனர்.
அந்த இடைப்பட்ட காலத்தில் தனிநபர்களின் விவரங்களைத் தேடி 500,000க்கும் மேற்பட்ட தேடல்கள் நடைபெற்றன. இது, வழக்கமான அன்றாட 2,000 முதல் 3,000 வரையிலான தேடல்களைவிட அதிகம்.
அடையாள அட்டை எண்கள் வெளியான விவகாரத்தை ஆய்வு செய்யும் குழு, தனது கண்டுபிடிப்புகளை மூத்த அமைச்சர் டியோ சீ ஹியனிடம் தெரிவிக்கும்.
இந்தக் குழு, குறிப்பாக பிஸ்ஃபைல் பொதுத்தேடல் தளத்தில் மேம்படுத்த வேண்டிய அம்சங்களை பரிந்துரைக்கும். மேலும் பொதுத் தேடல் செயல்பாடு அமலாக்கப்படுவதையும் வடிவமைப்பதையும் குழு ஆராயும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, திருவாட்டி இந்திராணி ராஜா சில பின்னணி விவரங்களையும் வெளியிட்டார்.
கடந்த 2024 ஜூலையில் புதிய வர்த்தக நடைமுறைகளில் மின்னிலக்க சேவைகளில் மறைக்கப்பட்ட தேசிய அடையாள அட்டை எண்களைப் பயன்படுத்தும் திட்டங்கள் ஏதாவது இருந்தால் அதனை நிறுத்தி வைக்குமாறு அரசாங்க அமைப்புகளுக்கு தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. ஆனால் அந்த உத்தரவை பிஸ்ஃபைல் பொதுத்தேடல் செயல்பாட்டில் அடையாள அட்டை எண்களை முழுமையாகக் காட்ட வேண்டும் என்று அக்ரா புரிந்துகொண்டது.
இருந்தாலும் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பில் ஏற்படக்கூடிய தாக்கம் உட்பட அடையாள அட்டை எண்களை மறைக்காததால் ஏற்படும் அபாயங்கள் குறித்து அக்ராவில் உட்புற விவாதம் இருந்தது. பின்னர் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சிடம் அக்ரா விளக்கம் கேட்டறிய முற்பட்டது.
ஆனால் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு, அக்ரா ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பில் இருந்த குறைபாடு காரணமாக அக்ரா அந்த உத்தரவை தொடர்ந்து தவறாக புரிந்துகொண்டது. இதனால் பிஸ்ஃபைல் தளத்தில் அடையாள அட்டை எண்கள் முழுமையாக வெளியாயின. “இந்தத் தருணத்தில் ஒன்றை நான் வலியுறுத்த விரும்புகிறேன். மறைக்கப்பட்ட அடையாள அட்டை எண்களின் பயன்பாட்டை நிறுத்த உத்தரவிடுவது அடையாள அட்டை எண்களை முழுமையாக வெளியிடுவது ஆகாது,” என்று அமைச்சர் இந்திராணி ராஜா விளக்கினார்.