பிஸ்ஃபைல் (Bizfile) இணையத் தளத்தில் அடையாள அட்டை எண் வெளிப்படையாக தெரிந்த ஐந்து நாள்களில் (டிசம்பர் 9 முதல் 13 வரை) தனிப்பட்டவர்களின் விவரங்கள் பற்றி 500,000க்கும் மேற்பட்ட தேடல்கள் நடைபெற்றுள்ளன.
இது, வழக்கத்திற்கு மாறானது என்றும் அந்த இலவச தேடல் செயல்பாட்டுக்கு அன்றாடம் 2,000 முதல் 3,000 விசாரணைகள் மட்டுமே வரும் என்றும் நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்தார்.
‘அக்ரா’ எனப்படும் கணக்கியல் நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் (ACRA) இணையத் தளத்தின்கீழ் இயங்கும் புதிய பிஸ்ஃபைல் இணையத் தளம் டிசம்பர் 9ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது.
இதன் வழியாக அடையாள அட்டை எண் வெளிப்படையாக தெரிவது குறித்து டிசம்பர் 12ஆம் தேதி பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.
டிசம்பர் 13ஆம் தேதி இரவு விவரங்களைத் தேடும் செயல்பாட்டை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்திவைத்தனர்.
பெருமளவிலான தேடல் டிசம்பர் 13ஆம் தேதி நடைபெற்றது என்று அமைச்சர் கூறினார்.
இந்தத் தேடல்கள், ஏறக்குறைய 28,000 ஐபி முகவரியிலிருந்து வந்ததாகவும் (IP addresses) அவற்றில் பெரும்பாலானவை சிங்கப்பூரிலிருந்து வந்தவை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
டிசம்பரில் அக்ராவின்கீழ் இயங்கும் பிஸ்ஃபைல் இணையத்தளத்தில் யார் வேண்டுமானலும் அடையாள அட்டை எண்களைப் பெற முடியும் என்ற நிலை இருந்தது. இது, பொதுமக்களிடையே பெருங்கவலையை ஏற்படுத்தியது.
தொடர்புடைய செய்திகள்
இந்தச் சம்பவம் தொடர்பில் புதன்கிழமை அன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி கேட்டனர்.
ஹவ்காங் நாடாளுமன்ற உறுப்பினர் டெனிஸ் டான், ஜூரோங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டான் வூ மெங் உள்ளிட்ட உறுப்பினர்கள் எத்தனை முறை தனிப்பட்டவர்களின் விவரங்கள் தேடப்பட்டன என்று கேள்வி எழுப்பினர்.
தேடல் செயல்பாட்டை நிறுத்துவதற்கு முன்பு எத்தனை அடையாள அட்டை எண்கள் தேடப்பட்டன, தீய நோக்கம் கொண்டவர்கள் விவரங்களைத் தேடினால் ஏற்படும் ஆபத்து குறித்தும் அவர்கள் கேள்வி கேட்டனர்.
இதற்குப் பதிலளித்த திருவாட்டி இந்திராணி ராஜா, பிஸ்ஃபைல் இணையத்தளத்தின் பொதுமக்கள் தேடல் செயல்பாடு, தனிப்பட்ட விசாரணைகளை கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப் படவில்லை என்றும் வெளியான அடையாள அட்டைகளின் சரியான எண்ணிக்கையை அதிகாரிகளால் அடையாளம் காண முடியவில்லை என்றார்.
அக்ராவும் கவ்டெக்கும்(GovTech) பொதுத் தேடல் செயல்பாட்டில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை ஆய்வு செய்தன.
பின்னர் இவை சரி செய்யப்பட்டன என்றார் அவர்.
“இதுவரை, 2024 டிசம்பர் 9 முதல் 13 வரையிலான விவரங்களைத் தேடும் செயல்பாடு மூலம் தீய நோக்கம் கொண்டவர்களிடமிருந்து எந்தவித அச்சுறுத்தல்களும் கண்டறியப்படவில்லை,” என்று அமைச்சர் இந்திராணி ராஜா மேலும் தெரிவித்தார்.