நோன்புப் பெருநாளையும் தொழிலாளர் தினத்தையும் ஒருசேர கொண்டாட இஸ்தானா அதன் கதவுகளை இம்மாதம் 13ஆம் தேதி பொதுமக்களுக்குத் திறக்கும்.
காலை 8.30 மணியிலிருந்து மாலை 6 மணி வரை கலாசார இசை, நடனம் போன்ற பல அங்கங்களைப் பொதுமக்கள் ரசிக்கலாம்.
மார்ச் 31ஆம் தேதி கொண்டாடப்பட்ட நோன்புப் பெருநாளையும் மே முதல் தேதி வரவிருக்கும் தொழிலாளர் தினத்தையும் முன்னிட்டு பொதுமக்களுக்கு இஸ்தானா திறக்கப்படுவதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
லசால் கலைக் கல்லூரியின் பாரம்பரிய மலாய் இசை, செம்பவாங் தொடக்கப் பள்ளி, உட்லண்ட்ஸ் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றின் கலைப் படைப்புகள் மக்களைக் கவரவிருக்கின்றன.
இஸ்தானா வில்லாவில் பொதுமக்கள் அரச அன்பளிப்புகளையும் காண முடியும். காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை முன்பதிவு செய்வோர் இஸ்தானா மரபுடைமைப் பயணத்திலும் கலந்துகொள்ளலாம்.
கேரிங்எஸ்ஜி, சிங்கப்பூர் குழந்தைகள் மன்றம் போன்ற சமூகச் சேவை அமைப்புகள் அமைத்திருக்கும் நடவடிக்கைக் கூடங்களையும் வருகையாளர்கள் பார்வையிடலாம்.
சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் இஸ்தானாவுக்குள் செல்ல கட்டணம் செலுத்தத் தேவையில்லை. அத்தகையோரின் குடும்பத்துடன் இஸ்தானாவுக்குச் செல்லும் வெளிநாட்டுப் பணிப்பெண்களுக்கும் அது பொருந்தும்.
மற்றவர்களைப் பொறுத்தமட்டில், பெரியவர்கள் 20 வெள்ளியும் சிறுவர்கள் 10 வெள்ளியும் கட்டணமாகச் செலுத்த வேண்டும். மேல் விவரங்களுக்கு go.gov.sg/visitistana என்ற இணையத்தளத்தை நாடலாம்.