இஸ்தானா ஏப்ரல் 19ஆம் தேதி பொதுமக்களுக்குத் திறப்பு

இஸ்தானா ஏப்ரல் 19ஆம் தேதி பொதுமக்களுக்குத் திறப்பு

2 mins read
ced183a1-0170-42c8-8a24-ff4bdae8917e
காலை 10 மணிமுதல் பிற்பகல் 3.40 மணிவரை வருகையாளர்கள் சிங்கப்பூரின் பல்லினக் கலாசாரத்தை எடுத்துக்காட்டும் இசை, பாடல், கலை நிகழ்ச்சிகளைக் காணலாம்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இஸ்தானா அதிபர் மாளிகை நோன்புப் பெருநாள், தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி காலை 8.30 மணி முதல் மாலை ஆறு மணி வரை பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும்.

புல்தரையில் உருட்டுப் பந்து, ஓவியம் வரைதல், கைவினைப் பொருள்கள் செய்தல், புதையல் வேட்டை உள்ளிட்ட நடவடிக்கைகளில் பொதுமக்கள் கலந்துகொள்ளலாம்.

இஸ்தானா திறப்பு குறித்து அதிபர் அலுவலகம் திங்கட்கிழமை (ஏப்ரல் 13) அறிக்கைமூலம் தகவல் வெளியிட்டது.

இந்த ஆண்டு நோன்புப் பெருநாள் மார்ச் 21ஆம் தேதி கொண்டாடப்பட்டது. மே 1ஆம் தேதி தொழிலாளர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

காலை 10 மணிமுதல் பிற்பகல் 3.40 மணிவரை வருகையாளர்கள் சிங்கப்பூரின் பல்லினக் கலாசாரத்தை எடுத்துக்காட்டும் இசை, பாடல், கலை நிகழ்ச்சிகளைக் காணலாம்.

பல தலைமுறைகளாக உள்ள கலைகள், இந்திய, மலாய் நடனங்கள் உள்ளிட்டவற்றையும் மக்கள் கண்டுகளிக்கலாம்.

‘மெக்பர்சன் ஃபில்ஹார்மோனிக்’ இசைக்குழு, பொங்கோல் வியூ தொடக்கப் பள்ளியின் குழந்தைகள் பாடகர் குழு, சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியின் இந்தியக் கலாசார மன்றம், சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியின் மலாய் மொழி மன்றம் உள்ளிட்ட குழுக்கள் கலை நிகழ்ச்சிகளைப் படைக்கின்றன.

அதேபோல், பொதுமக்கள் அன்று இஸ்தானவில் அமைக்கப்பட்டுள்ள சமூக அமைப்புகளின் விற்பனைக் கூடங்களையும் காண முடியும். சிங்கப்பூரில் சமூக அமைப்புகள் எப்படி மக்களுக்கு உதவி வழங்குகின்றன என்பதைப் பார்வையாளர்கள் அறிந்துகொள்ளலாம்.

மேலும், வருகையாளர்கள் இஸ்தானாவின் வளாகத்தைக் கண்டுகளிக்கலாம். இஸ்தானா கட்டட அமைப்பு, அங்குள்ள மலர் வகைகள் உள்ளிட்டவற்றை வருகையாளர்கள் பார்த்து ரசிக்கலாம்.

இஸ்தானாவுக்கு வருகை அளிக்கும் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், குடும்பத்தினருடன் வரும் வெளிநாட்டு ஊழியர்கள் ஆகியோருக்கு அனுமதி இலவசம்.

மற்ற பிரிவினருக்குக் கட்டணம் வசூலிக்கப்படும். பெரியவர்களிடம் 20 வெள்ளி, நான்கு முதல் 12 வயதுக்குக் கீழ் உள்ள பிள்ளைகளுக்கு 10 வெள்ளி கட்டணமாக வசூலிக்கப்படும்.

‘இஸ்தானா வில்லா’வுக்குள் செல்ல விரும்பும் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் 2 வெள்ளி செலுத்தவேண்டும். மற்றவர்கள் 10 வெள்ளி செலுத்த வேண்டும்.

மேல் விவரங்களை go.gov.sg/visitistana என்ற இணையப்பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்