முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் வழக்கில் தொடர்புடைய ஹோட்டல் தொழிலதிபரான ஓங் பெங் செங் மீது வெள்ளிக் கிழமை (அக்டோபர் 4) இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
பொதுச் சேவையில் இருக்கும் அதிகாரிக்கு அன்பளிப்பு கொடுத்தது தொடர்பில் 165 சட்டப் பிரிவின் கீழ் ஒரு குற்றச்சாட்டும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருந்ததாக மற்றொரு குற்றச்சாட்டும் அவர் மீது கொண்டு வரப்பட்டுள்ளது.
2022 டிசம்பரில் 78 வயது தொழிலதிபரான ஓங் பெங் செங், முன்னாள் போக்குவரத்து அமைச்சரான எஸ்.ஈஸ்வரன் விலையுயர்ந்த பொருள்களை இலவசமாகப் பெறுவதற்கு தூண்டுகோலாக இருந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அப்போது சிங்கப்பூரிலிருந்து டோஹாவுக்குச் செல்ல விலையுயர்ந்த தனிப்பட்ட விமானப் பயணத்துக்கு அவர் ஏற்பாடு செய்ய முன்வந்தார். அதன் மதிப்பு 7,700 யுஎஸ் டாலர் (S$10,410).
ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலில் ஈஸ்வரன் ஓர் இரவு தங்குவதற்கும் அவர் ஏற்பாடு செய்திருந்தார் என்று சொல்லப்படுகிறது. அதன் மதிப்பு 4,737.63 சிங்கப்பூர் வெள்ளி. திரு எஸ். ஈஸ்வரனுக்கு டோஹாவிலிருந்து சிங்கப்பூர் வருவதற்கு விமானத்தில் முதல் வகுப்பு பயணத்திற்கும் அவர் ஏற்பாடு செய்திருந்தார். அதன் மதிப்பு 5,700 வெள்ளி.
திரு ஓங், வெள்ளிக் கிழமை (அக்டோபர் 4) பிற்பகல் 2.20 மணியளவில் தம் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள அரசு நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.
அவருடன் ஆலன் அண்ட் கிளெட்ஹில் சட்ட நிறுவனத்தின் வழக்கறிஞர் ஆரோன் லீயும் வந்தார்.
2022 டிசம்பரில் தனியார் விமானம் மூலம் டோஹாவுக்கு பயணம் மேற்கொண்டதை லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு விசாரித்தது குறித்து ஈஸ்வரனிடம் ஓங் தெரியப்படுத்தினார் என்று திரு ஈஸ்வரன் மீதான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து இலவச அன்பளிப்பு பெற்றது குறித்த விசாரணையைத் தவிர்ப்பதற்காக டோஹா பயணத்திற்கு கட்ட வேண்டிய விலைப் பட்டியலை தமக்கு அனுப்பும்படி முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் ஓங்கைக் கேட்டுக் கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
இது, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஈஸ்வரன் இடையூறாக இருந்ததாகக் கருதப்பட்டது.
ஓங் மீது அக்டோபர் 4 ஆம் தேதி சட்டப் பிரிவு 165ன் கீழ் குற்றத்திற்கு துணையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது, இதன்படி, பொதுச் சேவை ஊழியர் ஒருவர், எந்த ஒரு நபரிடமிருந்தும் பணம் செலுத்தாமல் அல்லது போதுமான பணம் செலுத்தாமல் அவர்களிடமிருந்து மதிப்புள்ள பொருள்களை அன்பளிப்பாக ஏற்றுக்கொள்வது குற்றமாகும்.
அந்த வகையில் பொதுச் சேவை ஊழியர் ஒருவர், பரிசுகளைப் பெறுவதற்கு ஓங் பெங் செங் துணையாக இருந்த குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்.
நீதி நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருந்தது அவர் மீதான மற்றொரு குற்றச்சாட்டாகும்.
கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவால் ஓங் பெங் செங் கைது செய்யப்பட்டு 100,000 வெள்ளி பிணையில் விடுவிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலான நிலையில் அவர் வெள்ளிக் கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
இந்த நிலையில் நீதிமன்றத்தில் பேசிய வழக்கறிஞர் ஆரோன் லீ தமது கட்சிக்காரர் ஓங் பெங் செங்குடன் ஆலோசனை நடத்த கால அவகாசம் கேட்டுக் கொண்டார்.
ஆறு வாரம் ஒத்தி வைக்கவும் வழக்குக்கு முந்திய கலந்துரையாடலுக்கும் லீ வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கு கிறிஸ்டஃபர் ஓங் தலைமையிலான அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குழு ஆட்சேபம் தெரிவிக்காததால் வழக்கு நவம்பர் 15 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
திரு ஈஸ்வரன் தொடர்பான வழக்கில் லஞ்ச, ஊழல் விசாரணைப் பிரிவால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட பல தனிநபர்களில் சிங்கப்பூர் ஃபார்முலா ஒன் தலைவருமான ஓங் பெங் செங்கும் ஒருவர்.
திரு ஈஸ்வரன், 62, அக்டோபர் 3ஆம் தேதி திரு ஓங்கிடமிருந்து விலையுயர்ந்த அன்பளிப்புகள் பெற்றது உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டார். அவருக்கு 12 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.