தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஈஸ்வரனுக்கு 12 மாதச் சிறைத்தண்டனை

2 mins read
அக்டோபர் 7ஆம் தேதி தண்டனையை நிறைவேற்றத் தொடங்குவார்.  
e43c1527-787c-40f6-bfa2-b0b39bb11fad
அக்டோபர் 7ஆம் தேதி ஈஸ்வரன் தண்டனையை நிறைவேற்றத் தொடங்குவார்.   - படம்: சுந்தர நடராஜ்

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரனுக்கு வியாழக்கிழமை (அக்டோபர் 3), 12 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில், காலை 10.40 மணியளவில் நீதிபதி வின்சன்ட் ஹூங் இவ்வாறு தீர்ப்பு வழங்கினார். ஈஸ்வரனின் குடும்பத்தினர் உட்பட 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நீதிமன்றத்தில் கூடியிருந்தனர்.

ஓர் ஆண்டுத் தண்டனைக்கான தீர்ப்பை வழங்கியபோது அரசுத்தரப்பும் தற்காப்புத் தரப்பும் கோரிய தண்டனைக் காலத்தை ஏற்க முடியாது என்று கூறிய நீதிபதி ஹூங், கூடுதலான தண்டனை வழங்க முடிவெடுத்துள்ளதாகச் சொன்னார்.

அரசாங்க அமைப்புகளில் திறன்மிக்க நிர்வாகத்திற்கு நம்பிக்கையும் நம்பகத்தன்மையும் அடிப்படைக் கொள்கைகள் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை என்று ஈஸ்வரன் முன்னர் வெளிப்படையாகக் குறிப்பிட்டதை நீதிபதி சுட்டினார்.

பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தாம் குற்றமற்றவர் என்று ஈஸ்வரன் கூறியிருந்ததால், அவர் குற்றத்தை உணர்ந்து வருந்துவதாக நம்புவது தமக்குச் சிரமமாக இருப்பதாக நீதிபதி ஹூங் குறிப்பிட்டார்.

உயர் நீதிமன்றத்திலிருந்து காலை 11.35 மணியளவில் புறப்பட்ட முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன்.
உயர் நீதிமன்றத்திலிருந்து காலை 11.35 மணியளவில் புறப்பட்ட முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அக்டோபர் 7ஆம் தேதி ஈஸ்வரன் தமது தண்டனையை நிறைவேற்றத் தொடங்குவார். அன்று மாலை 4 மணிக்கு அரசு நீதிமன்றம் 4Aல் ஈஸ்வரன் சரணடைய வேண்டும் என்று நீதிபதி ஹூங் உத்தரவிட்டார்.

முன்னதாக, அவருக்கு ஆறிலிருந்து ஏழு மாதச் சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை வலியுறுத்தினர். எட்டு வாரங்களுக்கு மிகாத சிறைத்தண்டனை விதிக்கும்படித் தற்காப்புத் தரப்பு மூத்த வழக்கறிஞர் தவிந்தர் சிங் கேட்டுக்கொண்டார்.

அரசாங்கச் சேவையின்போது விலை மதிப்புள்ள பொருள்களை அன்பளிப்பாகப் பெற்றுகொண்டதாக ஈஸ்வரன் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. விசாரணைக்கு இடையூறு விளைவித்தது தொடர்பாக மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 165ன்கீழ், பொதுச் சேவை ஊழியர் ஒருவர், அவரது அதிகாரபூர்வ நிலையில் எவரிடமிருந்தும் விலைமதிப்புள்ள எதையும் இலவசமாகவோ போதிய கட்டணமின்றியோ ஏற்றுக்கொள்வது குற்றமாகும்.

ஹோட்டல் தொழிலதிபரும் சிங்கப்பூரில் ‘எஃப்1’ கார்ப் பந்தயங்கள் நடைபெற முக்கியக் காரணமாக இருந்தவருமான பெருஞ்செல்வந்தர் ஓங் பெங் செங், லாம் சாங் ஹோல்டிங்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் டேவிட் லாம் ஆகியோரிடமிருந்து ஈஸ்வரன் $400,000க்குமேல் மதிப்புள்ள அன்பளிப்புகளைப் பெற்றுக்கொண்டதை ஒப்புக்கொண்டார்.

அதில் $380,000ஐ அவர் அரசாங்கத்திடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

உயர் நீதிமன்றத்திலிருந்து வெளியாகும் ஈஸ்வரனின் வழக்கறிஞர் தவிந்தர் சிங்.
உயர் நீதிமன்றத்திலிருந்து வெளியாகும் ஈஸ்வரனின் வழக்கறிஞர் தவிந்தர் சிங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

62 வயதாகும் ஈஸ்வரன் சிங்கப்பூரில் ஐம்பது ஆண்டுகளில் நீதிமன்ற விசாரணைக்கு ஆட்படுத்தப்பட்ட முதல் அரசியல் பிரமுகர் ஆவார்.

கடந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி சிங்கப்பூரின் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு அப்போதைய போக்குவரத்து அமைச்சராக இருந்த ஈஸ்வரனை விசாரிப்பதாக அறிவித்தது.

இவ்வாண்டு ஜனவரி 18ஆம் தேதி அவர் அனைத்து அதிகாரத்துவப் பதவிகளிலிருந்தும் விலகினார். கிட்டத்தட்ட 27ஆண்டுகள் நீடித்த அவரது அரசியல் பயணம் அன்று முடிவுக்கு வந்தது.

குறிப்புச் சொற்கள்