தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தண்டனையை எதிர்நோக்கும் ஈஸ்வரன்: வழக்கறிஞர்கள் கருத்து

2 mins read
23653fc9-348b-4e0a-9efe-1421c34590df
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அக்டோபர் 3ஆம் தேதி முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீதான குற்றங்களுக்கான தண்டனை விதிக்கப்படவுள்ளது.

அவர் செப்டம்பர் 24ஆம் தேதியன்று ஐந்து குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். ஐந்து குற்றச்சாட்டுகளில் நான்கு, குற்றவியல் சட்டத்தின் 165ஆம் பிரிவுகீழ் பதிவு செய்யப்பட்டவை. பொதுத்துறை ஊழியராக மதிப்புமிக்க பொருள்களைப் பெற்றதற்காக அவர் மீது இந்த நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. எஞ்சியுள்ள ஒரு குற்றச்சாட்டு, நீதிக்கு இடையூறு விளைவித்ததன் தொடர்பில் பதிவு செய்யப்பட்டது.

தண்டனை விதிக்கப்படும்போது எஞ்சியுள்ள 30 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்படும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது.

குற்றச்சாட்டுகள் திருத்தப்பட்டதால் அதனால் எத்தகைய தாக்கம், அவற்றின் தண்டனை என்னவாக இருக்கும் என்று வழக்கறிஞர்கள் சில்வெஸ்டர் லீகல் சட்ட நிறுவனத்தின் இயக்குநர் திரு சிராஜ் ஷெய்க் அஸிஸ், குற்றவியல் சங்கத்தின் துணைத்தலைவரும் ‘குவாஹெ வூ அன்ட் பால்மர்’ சட்ட நிறுவனத்தின் (Quahe Woo & Palmer LLC) குற்றவியல் பிரிவு தலைவருமான சுனில் சுதீசன் ஆகியோரிடம் தமிழ் முரசு கேட்டறிந்தது.

குற்றச்சாட்டு திருத்தப்பட்டதால் என்ன மாற்றம் ?

குற்றவியல் சட்டத்தின் 165ஆம் பிரிவின்படி, பொதுச் சேவை ஊழியர் ஒருவர் தமது அதிகாரபூர்வ நிலையில் வர்த்தகத் தொடர்புகள் கொண்டுள்ளோரிடம், அந்த வர்த்தகத் தொடர்புகள் நிலவும் நேரத்தில் எந்த அன்பளிப்பையும் இலவசமாக அல்லது போதிய கட்டணமின்றி ஏற்றுக்கொள்வது குற்றமாகும்.

அன்பளிப்பு பெற்ற அதிகாரி, கொடுத்தவருக்கோ அல்லது கொடுத்தவர் விரும்பும்படி வேறு எவருக்கோ உபகாரம் ஏதேனும் செய்துள்ளதை இந்தச் சட்டத்தின்படி நிரூபிக்கவேண்டிய அவசியம் இல்லை.

இது அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்களின் பணியை மேலும் எளிதாக்கும்.

ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டவர், கையூட்டு பெற்று கைம்மாறு எதிர்பார்த்ததை அரசுத் தரப்பு நிரூபிக்க வேண்டும்.

குற்றவியல் சட்டத்தின் 165 பிரிவில் பதிவு செய்யப்பட்ட குற்றத்திற்கு, குற்றம் சாட்டப்பட்டவர் எதிர்பார்ப்புகளுடன் பொருள்களைப் பெற்றார் என்பதை நிரூப்பிப்பதற்குத் தேவை இராது.

தண்டனையின் கடுமை

குற்றச்சாட்டுகளின் திருத்தத்தால் ஈஸ்வரன் அதிகபட்சமாக எதிர்நோக்கும் தண்டனையும் குறைக்கப்பட்டுள்ளது.

ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றவாளிக்கு $100,000 வரையிலான அபராதம் அல்லது ஏழு ஆண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

தண்டனையின்போது எஞ்சியுள்ள 30 குற்றச்சாட்டுகளும் கருத்தில் கொள்ளப்படும் என்ற பட்சத்தில் அந்தக் குற்றச்சாட்டுகள் தண்டனையை அதிகரிக்கலாம்.

தண்டனை விதிக்கப்பட்ட பிறகு தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றால் ஈஸ்வரன் இந்த 30 குற்றச்சாட்டுகளின் தொடர்பில் மீண்டும் விசாரிக்கப்படமாட்டார்.

தீர்ப்புக்கு எதிராக ஈஸ்வரன் மேல்முறையீடு செய்து அதன்பின் தீர்ப்பு மாற்றப்பட்டால் 35 குற்றச்சாட்டுகள் மொத்தமாக அல்லது ஒரு பகுதியாக ஈஸ்வரன் மீது மீண்டும் சுமத்தப்படலாம், அல்லது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் விசாரணை மீண்டும் நடத்தப்படலாம்.

பொதுத்துறை ஊழியர்களுக்கான தரநிலை உயர்வானது

பொதுத்துறை ஊழியர்கள், குறிப்பாக சிங்கப்பூரில் அத்தகையவர்களுக்கான தரநிலைகளின் உயர்வை வழக்கின் தீர்ப்பு மட்டுமின்றி அதன் தண்டனையும் நினைவூட்டுகிறது.

குற்றங்களின் போது சட்டத்தைப் பற்றிய அறியாமையில் இருந்ததாக ஈஸ்வரன் முன்னதாக கூறியது ஓரளவு தண்டனையின் கடுமையைக் குறைக்கக்கூடும்.

குறிப்புச் சொற்கள்