பொருள், சேவை வரியை (ஜிஎஸ்டி) 7லிருந்து 9 விழுக்காடாக உயர்த்துவது ‘மிகவும் கடினமான முடிவு’ என்றாலும், ‘மூப்படைந்துவரும் சமூகத்தில் மூத்தோரைக் கவனித்துக்கொள்வதில் எங்களது நிலைப்பாட்டை நிறைவேற்ற’ அது தேவைப்பட்டதாக போக்குவரத்து அமைச்சரும் நிதி இரண்டாம் அமைச்சருமான சீ ஹொங் டாட் விளக்கமளித்துள்ளார்.
பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி மக்கள் செயல் கட்சி (மசெக) வேட்பாளரான அவர், சனிக்கிழமை (ஏப்ரல் 26) ஃபேஸ்புக்கில் வெளியிட்ட காணொளியில் இக்கருத்துகளை முன்வைத்தார். ஜிஎஸ்டியை 7 விழுக்காட்டுக்குக் குறைக்கும்படி எதிர்க்கட்சிகளின் பரிந்துரைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக அக்காணொளி அமைந்தது.
ஜிஎஸ்டியை உயர்த்துவது கடினமான முடிவாக இருந்தது என காணொளியில் கூறிய திரு சீ, அரசாங்கத்தால் முடிந்திருந்தால் அதைத் தவிர்த்திருக்கும் என்றார்.
“அனைத்துத் தெரிவுகளை நாங்கள் ஆராய்ந்தோம். ஜிஎஸ்டியை உயர்த்தாமல், மூப்படைந்துவரும் சமூகத்தில் மூத்தோரைக் கவனித்துக்கொள்ள எங்களது வாக்குறுதியை நிறைவேற்ற இயலாது,” என்று திரு சீ விளக்கினார்.
சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, வீடமைப்பு, பொதுப் போக்குவரத்து போன்ற அம்சங்களில் அரசாங்கம் ஆதரவளிக்க உதவும் படிப்படியான முறையின் ஓர் அங்கமாக ஜிஎஸ்டியிலிருந்து பெறப்படும் வருவாய் விளங்குவதாக திரு சீ சொன்னார்.
நிரந்தர ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாலும் கல்விக்கும் சுகாதாரப் பராமரிப்புக்கும் ஜிஎஸ்டி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாலும் சுற்றுப்பயணிகள், வெளிநாட்டவர்கள், வசதி உடையவர்களே சிங்கப்பூரின் ஜிஎஸ்டி வருவாய்க்கு பெரும்பகுதியைப் பங்களிப்பதை திரு சீ சுட்டினார்.
லோரோங் 4 தோ பாயோவுக்கு அருகே சனிக்கிழமை தமது அணியினருடன் தொகுதி உலா செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய திரு சீ, “பொறுப்பான அரசாங்கம் செய்ய வேண்டியது இதுவே. வரிகளை எங்களால் தவிர்க்க முடிந்தால் அவற்றை நாங்கள் உயர்த்த மாட்டோம்.
“ஆனால், எதிர்காலத்துக்குத் தயார்ப்படுத்தும் விதமாக மக்களைக் கவனித்துக்கொள்ளவதற்கு வரியை உயர்த்த வேண்டியிருந்தால், அதை நாங்கள் செய்வோம்,” என்றார்.