சிறிய கூட்டுரிமை அடுக்குமாடி வீடுகளுக்குத் தொடர்ந்து தேவை இருந்து வந்தாலும் அவற்றை மறுவிற்பனை செய்வது கடினம்.
சிங்கப்பூரில் வசிக்கும் பிரெஞ்சு நாட்டுப் பெண் ஒருவர், 2022-இல் ஒரே படுக்கையறை கொண்ட தமது வீட்டை விற்பனைக்கு விட்டபோது, அந்த வீடு விரைவில் விற்பனையாகும் என எதிர்பார்த்தார்.
வீட்டு விலைகள் ஏறுமுகமாக இருந்த காலகட்டம் அது.
ஆனால், மரினா பே ரெசிடன்சஸ் கூட்டுரிமை வீட்டில், 732 சதுர அடி பரப்பளவு கொண்ட அந்த வீடு, மூன்று ஆண்டுகளாக சந்தையிலேயே இருந்து வந்தது.
வீடு வாங்க முன்வந்தவர்கள் எதிர்பார்த்ததைவிட குறைவான விற்பனை விலையை முன்வைத்தனர்.
பெயர் குறிப்பிட விரும்பாத அந்த 51 வயது பெண், வேறு வழியின்றி ஆகஸ்ட் 2025ல் $1.6 மில்லியன் வெள்ளிக்கு வீட்டை விற்க சம்மதித்தார்.
விற்ற விலை, வீட்டை வாங்க 2016-இல் அவர் செலவிட்ட $1.55 மில்லியனை விடச் சிறிதளவுதான் கூடுதலாக இருந்தது.
அந்தப் பெண்ணைப்போல, சிறிய கொண்டோமினிய வீடுகளின் உரிமையாளர்கள் அவற்றை விற்பனை செய்வதில் சவால்களை எதிர்கொள்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
சிறிய வீடுகளுக்கான தேவை ஓரளவு சீராக இருந்தாலும், அவற்றின் விற்பனை விலையேற்றம் பொதுவாக மெதுவாக உள்ளதாக சந்தை நிலவரத் தகவல்கள் காட்டுகின்றன.
அத்தகைய வீடுகளை மறுவிற்பனை செய்வதற்கு அதிக நேரம் எடுக்கப்பட்டதுடன், அவற்றின் உரிமையாளர்களுக்குக் குறைவான லாபமே கிடைக்கிறது.
ஈஆர்ஏ ஆய்வு, சந்தை நுண்ணறிவு நிறுவனமும் நகர மறுசீரமைப்பு ஆணையமும் (யூஆர்ஏ) வெளியிட்ட தரவுகளின்படி, 2019 முதல் 2025 வரை மறுவிற்பனை செய்யப்பட்ட அடுக்குமாடி வீடுகளில் நான்கில் ஒரு பங்குதான் ஒரே படுக்கையறை வீடுகளாகவும் சிறிய வீடுகளாகவும் உள்ளன.
கடன்சுமை அதிகம் இன்றி வீட்டு உரிமையாளர்களாக விரும்புவோரையும் வீடுகளை வாடைக்கு விட விரும்பும் முதலீட்டாளர்களையும் இத்தகைய வீடுகள் ஈர்ப்பதாக ஆர்ஏ சிங்கப்பூரின் ஆராய்ச்சி, சந்தை நுண்ணறிவுத் தலைவர் திருவாட்டி வாங் ஷாண்டிங் தெரிவித்தார்.

