எந்தவொரு போட்டியிலும் முன்னும் பின்னுமாக வாதங்கள் இருப்பது இயல்பு. இந்த வாதங்களில் நாம் வெப்பத்தை மட்டுமன்றி ஒரு பாதைக்கான ஒளியையும் உருவாக்குவது சிறப்பு என்றார் கல்வி அமைச்சர் சான் சுன் சிங்.
பிரசாரங்கள் மக்களுக்கு உண்மையான, தொட்டுணரக்கூடிய தீர்வுகளைத் தராமல் அவர்களின் கோபத்தையோ உணர்வுகளையோ தூண்டுபவையாக இருக்கக்கூடாது என்றார் அவர்.
மக்கள் செயல் கட்சி (மசெக) எதிர்மறை அரசியலில் ஈடுபடு[Ϟ]கிறதா என்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) பாட்டாளிக் கட்சியின் நான்காவது பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் பிரித்தம் சிங் முன்வைத்த கேள்விகளுக்குத் திரு சான் செய்தியாளர்களிடம் பதிலளித்தார்.
“மக்களின் உணர்ச்சிகளை அதிகரித்து, உண்மையான, உறு[Ϟ]தி[Ϟ]யான தீர்வுகளை வழங்காதிருப்பது நேர்மறையான பிரசாரமன்று,” என்றார் திரு சான்.
பொதுத் தேர்தலில் மசெக சார்பில் தஞ்சோங் பகார் குழுத்தொகுதி வேட்பாளர்களை வழிநடத்தும் திரு சான் புதன்கிழமை (ஏப்ரல் 30) தஞ்சோங் பகார் சந்தை, உணவு நிலையத்தில் தொகுதி உலாவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.
அவருடன் தஞ்சோங் பகார் குழுத்தொகுதிக்கான இதர வேட்பாளர்கள் ஃபூ சசியாங், ஆல்வின் டான், ஜோன் பெரேரா, ரேச்சல் ஓங் ஆகியோரும் இருந்தனர்.
எந்தவொரு ஜனநாயகத்திலும் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சிக்கு ஒரு பங்கு உண்டு என்றார் திரு சான். அதுமட்டுமல்லாமல் தலைவர்களாகச் சேவையாற்றும் நாம் முதலில் பொறுப்பேற்ற பிறகே பாராட்டுகளை அணுக வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“நாம் அனைவரும் பணிவாக இருக்க வேண்டும். நம் கடமைக்குமேல் கோராமல் இருக்க வேண்டும்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
எந்தவொரு கட்சியையும் குறிப்பிடவில்லை என்றும் திரு சான் தெளிவுபடுத்தினார்.
“ஒரு குழுவாக எவ்வாறு சிறப்பாகச் செயல்பட முடியும், சிங்கப்பூருக்கு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதற்கான தரநிலையை உயர்த்திக்கொண்டே இருப்பது அவசியம்,” என்று சொன்னார் திரு சான்.
சிங்கப்பூரர்களின் பக்குவத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“முன்வைக்கப்படும் ஒவ்வொரு கொள்கையின் தரம், சவால்களுக்கான தீர்வுகள், அந்தத் தீர்வுகளை யார் வழங்க முடியும் என்பதையும் சிங்கப்பூரர்கள் அறிவார்கள் என்று எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது,” என்று அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் இந்திராணியின் பணிகளைத் தொடரத் தயார்: ஃபூ சசியாங்
தஞ்சோங் பகார் வட்டாரவாசிகள் தொடர்ந்து அமைச்சர் இந்திராணி ராஜா குறித்துக் கேட்பதாகத் தெரிவித்தார் தஞ்சோங் பகார் குழுத்தொகுதியின் புதுமுக வேட்பாளர் ஃபூ சசியாங்.
“அவர் இதுவரை செய்த பணிகளைப் பலர் பாராட்டுகிறார்கள். அதை மேலும் மேம்படுத்த விரும்புகிறேன்,” என்று தஞ்சோங் பகார் சந்தை, உணவு நிலையத் தொகுதி உலாவின்போது அவர் கூறினார்.
50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண் குடியிருப்பாளர்களுக்காகச் சென்ற ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகம் கண்ட H.U.N.C.L.E. திட்டத்தை ஓர் எடுத்துக்காட்டாகச் சுட்டினார் திரு ஃபூ.
“இதுபோன்ற திட்டங்கள் தஞ்சோங் பகார் வட்டாரவாசிகளுக்குத் தொடரும்,” என்றார் அவர்.
கடந்த சில நாள்கள் வட்டாரத்தில் தொகுதி உலா மேற்கொண்டபோது மூத்த குடியிருப்பாளர்கள் மட்டுமன்றி இளைய குடியிருப்பாளர்களையும் சந்தித்து மகிழ்ந்ததாகத் தெரிவித்தார் திரு ஃபூ.
“அனைத்துத் தலைமுறைகளையும் சேர்ந்த குடியிருப்பாளர்களுக்கு நாடாளுமன்றத்தில் ஒரு குரலாக இருக்க விரும்புகிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.