பெரிய மின்கழிவுகளை வீட்டிற்கே வந்து பெறும் முறை அறிமுகம்

பெரிய மின்கழிவுகளை வீட்டிற்கே வந்து பெறும் முறை அறிமுகம்

3 mins read
2025 முதல் இலவசச் சேவை
acf57db4-0968-4178-a7fd-832f90bb6399
வெஸ்ட்கேட் மால் கடைத்தொகுதியில் அனைத்துலக மின்கழிவு தினத்தையொட்டி கண்காட்சி ஒன்று நடைபெற்றது. அதனை நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பார்வையிட்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒரு மடிக்கணினியை வேண்டாமென்று மின்கழிவுத் தொட்டியில் வீசுவது எளிதான செயலாக இருக்கலாம். ஆனால், அதனை முற்றிலுமாக ஒழிக்கும் நடைமுறையில் அதிகமான உழைப்பு அடங்கி இருக்கிறது.

மடிக்கணினியில் உள்ள பாகங்கள் எவையெவை மறுசுழற்சிக்குத் தகுதியானவை என்பதைப் பிரித்து எடுத்து எஞ்சியவற்றை குப்பையில் சேர்க்க வேண்டி உள்ளது.

சிங்கப்பூரில் உள்ள ஒரே ஒரு குப்பைமேட்டில் அதிகக் குப்பைகள் சேருவதைத் தவிர்க்க இதுபோன்று செய்யப்படுகிறது.

அனைத்துலக மின்கழிவு தினமான அக்டோபர் 13ல் (ஞாயிற்றுக்கிழமை) அதுபற்றி விரிவாக எடுத்துச் சொல்லும் நிகழ்வு ஒன்று இங்கு நடந்தேறியது.

இவ்வாண்டின் நிகழ்வு, மின்கழிவு மறுசுழற்சியில் இருந்து தரவுகளைப் பாதுகாப்பது என்னும் கருப்பொருளை உள்ளடக்கியது.

ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள வெஸ்ட்கேட் மால் கடைத்தொகுதியில் நடைபெற்ற அந்த நிகழ்வில், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் கலந்துகொண்டு உரையாற்றினார்.

சிங்கப்பூரில் சேரும் மின்கழிவுகளின் அளவு பெருகி வருவதாக அப்போது அவர் குறிப்பிட்டார்.

ஈராண்டுகளுக்கு முன்னால், அதாவது 2022 பிப்ரவரியில் இங்கு 3,500 டன் மின்கழிவுகள் தேங்கிய நிலையில், இவ்வாண்டு செப்டம்பரில் அதன் அளவு 22,300 டன் என்று பன்மடங்கு பெருகிவிட்டதாகவும் டாக்டர் கோர் தெரிவித்தார்.

அதனைச் சமாளிக்கும் வகையில், சிங்கப்பூர் முழுவதும் உள்ள மின்கழிவு சேகரிப்பு முகப்புகளின் எண்ணிக்கை 300லிருந்து ஏறக்குறைய 870க்கு அதிகரிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டினார்.

கடைத்தொகுதிகள், பேரங்காடிகள் மற்றும் வர்த்தகக் கட்டடங்களில் அத்தகைய முகப்புகள் உள்ளன.

மின்கழிவுகளை அகற்றுகையில், தரவுகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்பதை டாக்டர் கோர் வலியுறுத்தினார்.

“நம்மில் பெரும்பாலோர் சொந்த, ரகசியத் தகவல்களை கைப்பேசிகள், மடிக்கணினிகள், கைக்கணினிகள் போன்றவற்றில் சேமித்து வைக்கிறோம். அந்தத் தகவல்கள் கசிந்தால் நாம் மிகவும் வேதனைப்படுவோம்.

“எனவே, தரவுகள் அடங்கிய சாதனங்களை, உரிமம் பெற்ற மறுசுழற்சி நிறுவனங்களுக்கு அனுப்பும் முன்னர் தரவுகளை நீக்குவதும் சாதனங்களின் பாகங்களைப் பிரித்து எடுப்பதும், நடப்பில் உள்ள சட்டத்தின்கீழ் கட்டாயம்,” என்று அவர் விளக்கினார்.

தேசிய சுற்றுப்புற வாரியம் கடந்த 2018ஆம் ஆண்டு நடத்திய ஆய்வு, சிங்கப்பூரில் ஒவ்வோர் ஆண்டும் 60,000 டன் அளவுக்கு மின்கழிவுகள் வீசப்படுவதைக் கண்டறிந்தது.

அந்த அளவு, இங்குள்ள ஒவ்வொருவரும் ஆண்டுதோறும் 73 கைப்பேசிகளை அல்லது ஏறக்குறைய 11 கிலோ மின்கழிவுகளை வீசுவதற்குச் சமம் என்று அந்த ஆய்வு குறிப்பிட்டு இருந்தது.

அதனைத் தொடர்ந்து, கடந்த 2021ஆம் ஆண்டு ஒழுங்குபடுத்தப்பட்ட மின்கழிவு நிர்வாக முறை ஒன்றை வாரியம் அறிமுகம் செய்தது.

மின்கழிவுகள் முறையாகச் சேகரிக்கப்பட்டு கையாளப்படுவதையும் மதிப்புமிக்க அம்சங்கள் அவற்றில் இருந்து பிரித்து எடுக்கப்படுவதையும் உறுதி செய்ய அந்த நடவடிக்கை அமல்படுத்தப்பட்டது.

2025ஆம் ஆண்டு முதல், குளிர்சாதனப் பெட்டி, குளிரூட்டி, சலவை இயந்திரம், தொலைக்காட்சிப் பெட்டி, உலர் சாதனம் போன்ற, தேவையில்லை என்று வீசப்படும் மின்கழிவுகளை வீட்டுக்கே வந்து பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.

மின்கழிவுகளுக்காக வாரியம் ஏற்கெனவே நியமித்த அல்பா (ALBA) என்னும் நிறுவனம் அந்தப் பணியைக் கையாளும் என்றும் இந்த இலவசச் சேவை எல்லா வீடுகளுக்கும் பொருந்தும் என்றும் டாக்டர் கோர் தமது உரையில் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
மின்கழிவுநீடித்த நிலைத்தன்மைசுற்றுப்புறம்