புதிய சைக்கிளோட்ட இணைப்புப் பாதைக்கானப் பணிகளை எளிதாக்குவதற்காக மத்திய விரைவுச்சாலையின் வெளிவழி ‘8ஏ’ நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஆறு நாள்கள் மூடப்படும்.
இதனால், துவாஸ் நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையை இணைக்கும் மத்திய விரைவுச்சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்கள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நவம்பர் 28, 29, டிசம்பர் 16, 17, 18,19 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அவ்வழி மூடப்பட்டிருக்கும் என நகர மறுசீரமைப்பு ஆணையம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
பீஷானையும் நகர மையத்தையும் இணைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, பொத்தோங் பாசிர், பெண்டமியர் ஆகிய பகுதிகளுக்கு இடையிலான தொடர்பை மேம்படுத்தும் நோக்கில் தீவு விரைவுச்சாலையின் குறுக்கே பாதசாரிகள், சைக்கிளோட்டிகளுக்கான புதிய இணைப்புப் பாதை அமைக்கப்படுவதாக ஆணையம் கூறியது.
அக்காலகட்டத்தில் மத்திய விரைவுச்சாலையில் பயணம் செய்வோர் மோல்மின் ரோடு, தாம்சன் ரோடு வழியாகத் தீவு விரைவுச்சாலைக்குள் நுழைய வெளிவழி ‘7சி’ஐப் பயன்படுத்த வேண்டும்.
வாகனம் ஓட்டுவரோக்கு வழிகாட்டுவதற்குத் தடுப்புகளும் அறிவிப்புப் பலகைகளும் வைக்கப்பட்டிருக்கும். வழிகாட்டிப் பலகைகளைக் கவனமாகப் பின்பற்றுமாறு அவர்களுக்கு ஆணையம் ஆலோசனை கூறியது.
