பணியிடங்களில் நிலவும் மூப்படைவோருக்கு எதிரான பாகுபாட்டு மனப்பான்மை, பணி ஓய்வுக்குப் பிந்தைய இறுக்கமான வேலைவாய்ப்புகள், உடல்நலம் குறித்த எதிர்மறை எண்ணங்கள் ஆகியவற்றை எதிர்கொண்டு வெல்வதே, மக்கள் நீண்ட காலம் வாழ்வதைக் கொண்டாடுவதற்கான முக்கிய வழிமுறையாகும் எனச் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் வெற்றிகரமான மூப்படைதல் குறித்த ஆய்வு மையத்தின் இயக்குநரான பேராசிரியர் பாலின் ஸ்ட்ரோகன் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 20) நடைபெற்ற கருத்தரங்கில் இவர் பேசினார்.
சிங்கப்பூரில் உள்ள மூத்த குடிமக்கள் ஆரோக்கியமாக வாழ்வதோடு, தங்களது ஆரோக்கியமான ஆயுட்காலத்தை நிலைநிறுத்த தொடர்ந்து பணியாற்ற வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டார்.
பணி ஓய்வு வயதைக் கடந்தவர்கள், குறிப்பாகத் தங்களது அனுபவத்துக்கு ஏற்பப் போதிய ஊதியம் கிடைக்காத நிலையில், வழக்கமான வேலை நேரத்துக்கு வேலை செய்ய விரும்பாமல் போகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.
“வெளிப்படையாகச் சொன்னால், அவர்கள் இப்போது துணை ஊழியர்களாகவே பார்க்கப்படுகிறார்கள். தேவைப்படும்போது ஒப்பந்தம் நீட்டிக்கப்படுகிறது. தேவையில்லாதபோது முதலில் வெளியேற்றப்படுபவர்களும் அவர்களே,” என்று அவர் கூறினார்.
மேலும், வயது முதிர்ந்த ஒருவரால் பணியிடத்தில் பங்களிக்க முடியாது என்ற எண்ணமே மூப்படைவோர் மீதான பாகுபாட்டை வளர்க்கிறது. இது அவர்களிடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே பணியிடத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகளிலும் எதிரொலிக்கிறது.
“எங்களது ஆய்வில், 40 வயதை எட்டியவுடனேயே பயிற்சி வாய்ப்புகள் தங்களை விட்டு் நழுவுவதாக 40க்கும் 50க்கும் இடைப்பட்ட வயதினர் தெரிவிக்கின்றனர். இளைய ஊழியர்களுக்குப் பயிற்சியளித்தால் நீண்ட காலத்துக்குப் பலன் பெறலாம் என முதலாளிகள் கருதுவதே இதற்கு முக்கியக் காரணம்,” என்று ஸ்ட்ரோகன் சுட்டிக்காட்டினார்.
பணியிடப் பாகுபாட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் ஸ்ட்ரோகன், பிறப்பு விகிதம் குறைந்து வரும் சூழலில், அதிக மூப்படைந்த சமூகமாக மாறி வரும் சிங்கப்பூரின் சிறிய அளவிலான ஊழியரணிக்கு இந்த மனப்போக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்தார்.
