சிங்கப்பூரில் நிறுவனங்களும் ஊழியர்களும் செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது முக்கியம் என்று நிபுணர்களும் வல்லுநர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
வரவுசெலவுத் திட்டம் 2026 குறித்துத் தமிழ்முரசு, எஸ்பிஎச் அரங்கில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) நடத்திய கலந்துரையாடலில் அந்தக் கருத்து முன்வைக்கப்பட்டது.
இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில் பிரதமர் லாரன்ஸ் வோங், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை நாடு தழுவிய நிலையில் பயன்படுத்துவதன் முக்கியத்தைப் பற்றி விரிவாகப் பேசியிருந்தார்.
அரசாங்கம் நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் முதலிட முடிவுசெய்திருப்பதாகக் கூறினார், சிங்கப்பூர் இந்திய உணவகங்கள் சங்கத்தின் கௌரவச் செயலாளரும் சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபை நிர்வாகக் குழு உறுப்பினருமான திரு மகேந்திரன். கேட்டரிங் சொல்யூஷன்ஸ் எனும் தமது நிறுவனத்தில் பல்வேறு நிலைகளில் அதனைப் பயன்படுத்த முயற்சிகளை மேற்கொள்வதாக அவர் சொன்னார்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வளங்களை மக்கள் அச்சமின்றிப் பயன்படுத்தினால் பலன் கிடைக்கும் என்றார் வங்கித் துறை வல்லுநரும் சிங்கப்பூர் மலாய் வர்த்தக, தொழிற்சபையின் நிர்வாகக் குழு உறுப்பினருமான திரு ராஜா முகமது.
வேலையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதே ஊழியர்களின் எதிர்காலத்தை முடிவுசெய்யும் என்றார் தொழில்நுட்ப நிபுணரும் நிறுவனங்களுக்கான பல காப்புறுதி, தீர்வுத் தளங்களை நிறுவியவருமான திரு கோபி கண்ணன்.
வரவுசெலவுத் திட்டம் 2026ல் இடம்பெற்ற பல்வேறு அம்சங்கள் பற்றியும் கலந்துரையாடலில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

