கையூட்டு குறித்து மனிதவள அமைச்சுக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது: சண்முகம்

2 mins read
d95aff68-e297-4701-a90e-a2b457c50d68
இத்தகைய லஞ்ச ஊழல் சம்பவங்கள், குறிப்பாக நகர மன்றத்தின் நடவடிக்கை குறித்து மற்ற அரசியல் கட்சிகள் உட்பட சிங்கப்பூரர்கள் கேள்வி கேட்பது வழக்கம் என்றார் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம். - படம்: த. கவி

லஞ்ச ஊழல் குற்றங்கள் நடந்தால் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் செயல்படுவது அவசியம் என்றும் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் சனிக்கிழமை (பிப்ரவரி 1) செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

லஞ்ச ஊழல் குற்றத்திற்காக நீ சூன் ஈஸ்ட் குடியிருப்புப் பேட்டை துப்புரவுப் பணி குத்தகையாளர் நிறுவனத்தின் செயலாக்க மேலாளருக்குக் கடந்த நவம்பர் 14ஆம் தேதி சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திரு சண்முகம் அவ்வாறு கூறினார். 

புதிதாகப் புதுப்பிக்கப்பட்ட நீ சூன் நகர மன்ற அலுவலகத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர், இத்தகைய லஞ்ச ஊழல் சம்பவங்கள், குறிப்பாக நகர மன்றத்தின் நடவடிக்கை குறித்து மற்ற அரசியல் கட்சிகள் உட்பட சிங்கப்பூரர்கள் கேள்வி எழுப்புவது இயல்பு என்றார். 

“என்ன நடந்தது என்று புரியாமல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு முன்பு முதலில் முழுமையான சூழ்நிலையைப் புரிந்துகொள்வது முக்கியம்,” என்று வலியுறுத்தினார். 

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை தொடர்ந்து நடந்து வந்த இந்தக் கையூட்டு குற்றம் ஆகப் பெரிய லஞ்ச ஊழல் சம்பவங்களில் ஒன்று என மனிதவள அமைச்சு தெரிவித்தது. 

நகர மன்றத்தின் இடித்துரைப்பாளர்கள் (whistleblowers) அமைப்பின் மூலம் அமைச்சர் சண்முகம் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்தச் சம்பவம் குறித்து தெரியவந்ததைத் தொடர்ந்து மனிதவள அமைச்சுக்கு உடனே புகார் அளிக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டன. 

“நேர்மையுடன் செயல்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் வரை நகர மன்றம் முறையாகச் செயல்பட்டு வருகிறது என்பதை உறுதிசெய்ய முடியும்,” என்றார் அமைச்சர் சண்முகம். 

இந்தக் குற்றம் ஒரு தனிநபரைச் சார்ந்ததாக உள்ளதால் நிறுவனம் தொடர்ந்து நீ சூன் ஈஸ்ட் குடியிருப்புப் பேட்டையில் சேவையாற்றும் என்றும் தெரிவித்தார். 

“ஊழியர்களின் நலனே எங்களின் முன்னுரிமையாக உள்ளது. ஒட்டுமொத்த நிறுவனத்தின் சேவையைத் தடுப்பதால் பல ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள். அதை நாம் தவிர்க்க விரும்புகிறோம்,” என்றும் திரு சண்முகம் கூறினார்.  

இதற்கிடையே, புதுப்பிக்கப்பட்டுள்ள நீ சூன் நகர மன்ற அலுவலகம் திறந்துவைக்கப்பட்ட நிகழ்வுக்கும் திரு சண்முகம் சென்றார். நீ சூன் குடியிருப்பாளர்களின் அதிகரித்துவரும் தேவைகளுக்கு ஏற்ப நவீன வசதிகளை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
அமைச்சர்நகர மன்றம்நாடாளுமன்ற உறுப்பினர்கள்