தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேர்தல் தொகுதி எல்லை மாற்றங்களால் கட்டுண்டு கிடக்காமலிருப்பது முக்கியம்: பிரித்தம் சிங்

2 mins read
0d837741-7206-4192-97d6-107bba27df5d
பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்கும் அவரது தலைமையில் அல்ஜுனிட் குழுத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் சில்வியா லிம், ஜெரால்ட் கியாம், கென்னத் டியோங், ஃபட்லி ஃபௌஸி ஆகியோரும் மே 4ஆம் தேதி பிடோக் ரெசர்வோர் உணவங்காடி நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேர்தல் தொகுதி எல்லை மாற்றங்களால் கட்டுண்டு கிடக்காமலிருப்பது முக்கியம் என்றும் பொதுத் தேர்தல் 2025ன் முடிவுகள் பாட்டாளிக் கட்சியின் புதுப்பிப்புத் திட்டங்களுக்கு வாய்ப்புகளை வழங்கக்கூடும் என்றும் அக்கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை (மே 4), தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்கும் அவரது தலைமையில் அல்ஜுனிட் குழுத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் சில்வியா லிம், ஜெரால்ட் கியாம், கென்னத் டியோங், ஃபட்லி ஃபௌஸி ஆகியோரும் மே 4ஆம் தேதி பிடோக் ரெசர்வோர் உணவங்காடி நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினர். 

சிங்கப்பூரின் ஆகப் பெரிய எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சி, அல்ஜுனிட் குழுத்தொகுதி, செங்காங் குழுத்தொகுதி, ஹவ்காங் தனித்தொகுதி ஆகியவற்றைத் தக்கவைத்துக் கொண்டது. மொத்தம் 10 நாடாளுமன்ற இடங்களைக் கைப்பற்றினாலும் புதிய இடங்களில் அது வெற்றி பெறவில்லை.

ஜாலான் காயு தனித்தொகுதியிலும் தெம்பனிஸ் குழுத்தொகுதியிலும் அது மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றதால் அக்கட்சியில் இருவருக்குத் தொகுதி இல்லா நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஒதுக்கப்படும்.

அல்ஜுனிட் குழுத்தொகுதிக் குடியிருப்பாளர்களுக்கு நன்றி கூறும் தொகுதி உலாவுக்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய திரு சிங், “தேர்தல் தொகுதி எல்லை மறுவரை செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட மாற்றங்களால் கட்டுண்டு கிடக்காமலிருப்பது பாட்டாளிக் கட்சிக்கு முக்கியம் என்று கருதுகிறேன்,” என்று கூறினார்.

பல்லாண்டு காலம் மரின் பரேட் வட்டாரத்தில் கவனம் செலுத்தி வந்த பாட்டாளிக் கட்சி விரைவாகப் புதிய பொங்கோல் குழுத்தொகுதியில் தனது கவனத்தைச் செலுத்தும் திறன் பெற்றிருப்பதை அவர் சுட்டினார்.

மற்ற வட்டாரங்களிலும் சிறப்பாகச் செயல்பட முடிவது கட்சியின் செயல்திறனுக்கு நல்ல சான்று என்றார் அவர்.

இந்தப் பொதுத் தேர்தலில் பாட்டாளிக் கட்சி போட்டியிட்ட அல்ஜுனிட், ஈஸ்ட் கோஸ்ட், தெம்பனிஸ் குழுத்தொகுதிகளின் எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டவை. அதேவேளையில் ஜாலான் காயு, தெம்பனிஸ் சங்காட் தனித்தொகுதிகளும் பொங்கோல் குழுத்தொகுதியும் புதிதாக அமைக்கப்பட்டவை.

கடந்த பொதுத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை பாட்டாளிக் கட்சிக்கான வாக்கு எண்ணிக்கை 0.46 விழுக்காடு சரிந்துள்ளது.

இருப்பினும், கட்சி வெற்றிபெற்ற இடங்களில் முடிவுகள் குறித்துத் தாம் பெருமைப்படுவதாகவும் மற்ற தொகுதிகளைப் பொறுத்தவரை கட்சி கடினமாகப் போட்டியிட்டதாகவும் மிகச் சிறந்த முறையில் செயலாற்றியதாகவும் திரு சிங் கூறினார்.

பொதுத் தேர்தல் முடிவுகள் கட்சியின் புதுப்பிப்புத் திட்டங்களுக்கு வாய்ப்பாகக் கருதப்படுவதாகத் திருவாட்டி சில்வியா லிம் கூறினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்துப் பேரில் மூவர் நாடாளுமன்றத்துக்குப் புதியவர்கள் என்பதை அவர் சுட்டினார்.

தொகுதி இல்லா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை யாருக்கு வழங்குவது என்று இன்னும் முடிவாகவில்லை என்று கூறிய அவர், கட்சி முடிவெடுத்தால் புதியவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படக்கூடும் என்றார்.

குறிப்புச் சொற்கள்