தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘அது என் சன்னலைத் தட்டியது’: ஜூரோங் வெஸ்ட் வீவக வீட்டிலிருந்து மலைப்பாம்பு மீட்பு

2 mins read
51466bb2-9741-4097-8065-6d2ae1b119f8
ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள ஒரு புளோக்கின் இரண்டாவது தளத்தில் இருக்கும் வீவக வீட்டிற்கு வெளியே ஒரு மலைப்பாம்பு காணப்பட்டது. - படங்கள்: முக்லிஸ், ஏக்கர்ஸ் சிங்கப்பூர்

ஜூரோங் வெஸ்ட் குடியிருப்பாளரான திரு முக்லிஸ், ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 8) வழிப்போக்கர்கள் இருவரின் அலறல் சத்தத்தால் பகல் தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்டார்.

வீட்டு அறை சன்னல்களையும் கதவுகளையும் உடனடியாக மூடும்படி திரு முக்லிசிடம் அவர்கள் அறிவுறுத்தினர்.

விளையாட்டுப் பயிற்றுநரான திரு முக்லிஸ், 54, “அப்போது என் வசிப்பறை சன்னல் திறந்திருந்தது. பாம்பு தென்பட்டதால், மின்தூக்கியில் ஏறி வந்து சன்னல்களை மூடும்படி அவர்கள் கேட்டுக்கொண்டனர்,” என்றார்.

புளோக் 925 ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 92ன் இரண்டாம் தளத்தில் உள்ள திரு முக்லிசின் மூவறை வீட்டிற்கு வெளியே மலைப்பாம்பு ஒன்று செல்வதை அந்த வழிப்போக்கர்கள் இருவரும் கண்டனர்.

உடனடியாக கட்டிலில் இருந்து எழுந்த திரு முக்லிஸ், பிரதான படுக்கையறை, சமையலறை சன்னல்களை மூடினார்.

“என் மனைவி பதற்றமடைந்தார். ஆனால், நான் நிறைய National Geographic நிகழ்ச்சிகளைப் பார்ப்பதால், என்ன செய்தவென்று எனக்குத் தெரிந்ததது,” என்றார் அவர்.

பிரதான படுக்கை அறையிலிருந்து ஏதோ தட்டும் சத்தம் அவருக்குக் கேட்டது.

“அந்தப் பாம்பு என் சன்னலைத் தட்டியது. சன்னல் திறந்திருந்தால் அது என் அறைக்குள் நுழைந்திருக்கும்,” என்று அவர் சொன்னார்.

சன்னல்கள் அனைத்தும் இறுக்கமாக மூடியிருப்பதை உறுதிசெய்தவுடன், ஏக்கர்ஸ் அமைப்பை திரு முக்லிஸ் தொடர்புகொண்டார். இருபது நிமிடங்கள் கழித்து, அதன் வனவிலங்கு மீட்புக் குழு ஏணியுடன் வந்துசேர்ந்ததாக அவர் கூறினார்.

“மலைப்பாம்பு ஏறத்தாழ 3.5 மீட்டர் நீளம் இருந்தது. இதனால் அதை மீட்கும் பணி சற்று சவாலாக இருந்தது,” என்றார் ஏக்கர்ஸ் இணைத் தலைமை நிர்வாகி கலைவாணன் பாலகிருஷ்ணன் சொன்னார்.

ஏக்கர்ஸ் ஊழியர் ஒருவர் ஏணியில் ஏறி அந்த மலைப்பாம்பை மீட்டார். அது, திரு முக்லிசின் வீட்டிற்கு வெளியே இருந்த குளிர்சாதனக் கருவியின் குழாய்களுக்கு இடையே சுற்றிக்கொண்டது.

அத்தறுவாயில், புளோக்கைச் சுற்றி ஏறத்தாழ 50 பேர் திரண்டுவிட்டனர்.

அடையாளத்துக்காக அந்தப் பாம்பின் மீது கணினிச் சில்லு பொருத்தப்பட்டு, அது காட்டுப்பகுதியில் விடுவிக்கப்படும் என்று திரு பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்