எவரெஸ்ட், கே2 என்ற உலகின் ஆக உயரமான இரு சிகரங்களில் ஏறிய முதல் இரு சிங்கப்பூர் பெண்கள் என்ற சாதனையைப் படைத்துள்ளனர் வின்செரே ஸெங், சிம் ஃபே சுன் என்ற இருவர்.
கடும் பனிப்பொழிவு, காற்று, மூடுபனி எனச் சவால் பல கடந்து இவ்விருவரும் கடந்த ஜூலை 27ஆம் தேதி பாகிஸ்தானின் காரகோரம் மலைத்தொடரில் உள்ள கே2 சிகரத்தை அடைந்தனர்.
கடல் மட்டத்திலிருந்து 8,611 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது கே2.
ஸெங்கும் சிம்மும் முன்னதாக 8,848 மீட்டர் உயரம் கொண்ட உலகின் ஆக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் உருமாற்றத் திட்ட மேலாளராகப் பணிபுரியும் ஸெங், கே2 சிகரத்தின் உச்சியை அடைய சில மீட்டரே இருந்த நிலையில் ஆறு மணி நேரம் நிற்க வேண்டியதாயிற்று. அவரது உயிர்வாயுக் கலனில் இருந்த உயிர்வாயுவின் அளவும் குறைவாக இருந்தது.
“ஒவ்வோர் அடி எடுத்துவைக்கும்போதும் என் கால்கள் நடுங்கின; இதயம் படபடவென அடித்துக்கொண்டது. தவறு நிகழ இடம் கொடுக்கலாகாது என்பதால் நான் மிகுந்த கவனமாகவும் எச்சரிக்கையாகவும் செயல்பட வேண்டியிருந்தது,” என்றார் 31 வயதான ஸெங்.
அங்கு மீட்புப் பணியும் இடம்பெற்று வந்ததால் சிகரத்தை அடைய மெதுவாகவே ஏற வேண்டியிருந்தது என்றார் அவர்.
சிகரத்தை அடைய 400 மீட்டர் தொலைவே இருந்த நிலையில் பாகிஸ்தான் சுமைதூக்கி முகம்மது ஹாசன் கால்தவறி கீழே விழுந்து இறந்துவிட்டதாக ‘சௌத் சைனா மார்னிங் போஸ்ட்’ செய்தி தெரிவித்தது.
மலையேற்ற ஆர்வலர்களான ஸெங்கும் சிம்மும் கடந்த 2018ஆம் ஆண்டு ஒருவருக்கொருவர் அறிமுகமாகினர்.
ஸெங் இதுவரை 5,000 மீட்டர் உயரத்திற்கும் அதிகமான 30க்கும் மேற்பட்ட மலைகளில் ஏறியிருக்கிறார்.
நிலப் போக்குவரத்து ஆணையத்தில் பணிபுரியும் 47 வயதான சிம், உலகம் முழுவதுமுள்ள பல மலைப்பகுதிகளில் இடம்பெற்ற ஓட்டப் பந்தயங்களில் கலந்துகொண்டுள்ளார். அவ்வகையில் அவர் 160 கிலோமீட்டர் தொலைவு ஓடியுள்ளார்.
“எவரெஸ்ட் உட்பட, ஒவ்வொரு கண்டத்திலும் உயரமான சிகரம் என ஏழு சிகரங்களை நான் தொட்டுவிட்டேன்,” என்று பெருமிதம் பொங்கக் கூறினார் சிம்.
மிகுந்த நுணுக்கமான திறன்கள் வேண்டும் என்பதால் எவரெஸ்ட்டைக் காட்டிலும் கே2 சிகரத்தில் ஏறுவது மிகவும் கடினமானது என்கிறார் இவர்.