தற்போதைய கொவிட் நிலைமை அதிக ஆபத்தானது என்பது உண்மையல்ல: சிடிஏ

தற்போதைய கொவிட் நிலைமை அதிக ஆபத்தானது என்பது உண்மையல்ல: சிடிஏ

2 mins read
3acefb4e-7a22-46da-bf76-272d748c560d
சிங்கப்பூரில் கொவிட் பற்றிய செய்தி பரப்பப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் அண்மையில் கொவிட்-19 பாதிப்புகள் மீண்டும் அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்தக் கிருமியின் புதிய வகை, காய்ச்சலை ஏற்படுத்தாது என்றும் அதன் அறிகுறிகளைக் கண்டறிவது கடினம். அதனால் இது மிகவும் ஆபத்தானது என்றும் கூறும் ஒரு குறுஞ்செய்தி இணையத்தில் பரவி வருகிறது.

தொற்றுநோய் நிலையமும் தொற்றுநோய் நிபுணர்களும் இது உண்மையல்ல என்றும், இதன் அறிகுறிகள் முந்தைய வகைகளின் அறிகுறிகளைப் போலவே, லேசான சுவாசக்குழாய் தொற்று முதல் நிமோனியா போன்ற கடுமையான நோய்கள் வரை இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

தற்போது சிங்கப்பூரில் பரவி வரும் முக்கிய கொவிட்-19 வகை NB.1.8.1 வகை என்றும், உள்நாட்டில் கண்டறியப்பட்ட பாதிப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை இந்த வகையைச் சேர்ந்தவை என்றும் தொற்றுநோய் நிலையத்தின் தொற்றுநோய்கள் திட்டங்களின் குழு இயக்குநரான இணைப் பேராசிரியர் லிம் போ லியான் கூறினார்.

“தற்போதைய சான்றுகளின்படி, NB.1.8.1 உடன் தொடர்புடைய அறிகுறிகள், முந்தைய அலைகள் அல்லது முந்தைய திரிபுகளில் காணப்பட்ட அறிகுறிகளைப் போலவே உள்ளன. அவை லேசான சுவாச நோயிலிருந்து நிமோனியா போன்ற கடுமையான நோய் வரை வேறுபடுகின்றன.

“பொதுவாகப் பதிவாகும் அறிகுறிகளில் காய்ச்சல், குளிர், இருமல், தொண்டை வலி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, சோர்வு, தசை வலிகள், சில சமயங்களில் குமட்டல், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு போன்ற இரைப்பை குடல் சார்ந்த அறிகுறிகளும் அடங்கும்,” என்று அவர் கூறினார்.

ஆசிய-பசிபிக் மருத்துவ நுண்ணுயிரியல் மற்றும் தொற்றுநோய் சங்கத்தின் முன்னாள் தலைவரான பேராசிரியர் பால் தம்பையா, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம், அந்தச் செய்தியில் கூறப்பட்டிருப்பது போல் கொவிட்-19 மூன்று ஆண்டுகளுக்குப் பதிலாக ஆறு ஆண்டுகளுக்கு முன்பே முதன்முதலில் தோன்றியதால், அந்தக் குறுஞ்செய்தி ஒரு பழைய செய்தியாகத் தோன்றுகிறது என்று கூறினார்.

மே 21ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், மே 10 முதல் மே 16 வரையிலான வாரத்தில் கொவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை 12,700 ஆக உயர்ந்துள்ளது என்றும் இது முந்தைய வாரத்தில் பதிவான 8,000 பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது சுமார் 59 விழுக்காடு அதிகம் என்றும் தொற்றுநோய் நிலையம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
தொற்றுநோய்பேராசிரியர்காய்ச்சல்