மணமுறிவு நடைமுறையை எளிமையாக்க முஸ்லிம் சட்டத்தில் மாற்றம் செய்ய பரிந்துரை

மணமுறிவு நடைமுறையை எளிமையாக்க முஸ்லிம் சட்டத்தில் மாற்றம் செய்ய பரிந்துரை

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

06 Oct 2026 - 7:10 pm

2 mins read

கணவனும் மனைவியும் மணமுறிவுக்கு ஒப்புக்கொண்டு, அது தொடர்பான எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுள்ள சில முஸ்லிம் தம்பதிகள், முஸ்லிம் சட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய மாற்றங்களின் மூலம் தங்களின் விவாகரத்து நடைமுறையை வழக்கத்தை விடக் குறைந்தது ஆறு மாதங்கள் வரை விரைவாக நிறைவு செய்ய முடியும்.

மணமுறிவு நடைமுறைகளின் தேவைகளை எளிமையாக்கும் இந்த மாற்றங்கள், தம்பதிகள் தங்களுக்கு இடையேயான விவாகரத்தை அமைதியான முறையில் விரைவாக முடிவுக்குக் கொண்டுவர உதவும் என்று கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், தேவையற்ற தாமதங்களால் ஏற்படும் மன உளைச்சலைத் தவிர்க்கவும் அது உதவும் என்றும் அமைச்சு கூறியது.

தற்போதைய சட்டத்தின்படி, ‘தலாக் தஃப்வீத்’ (மணமுறிவை அறிவிக்கும் அதிகாரத்தை மனைவிக்கு அவரது கணவர் வழங்குவது) மூலம் திருமணத்தை முடிக்க விரும்பும் முஸ்லிம் தம்பதிகள் ‘ஹக்கம்’ (தம்பதியருக்கு இடையிலான சமரச அதிகாரி) ஒருவரை நியமிக்க வேண்டும்.

முஸ்லிம் சட்ட நிர்வாக விதிமுறைகளில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள், செய்திருந்த திருமணத்தை ரத்து செய்ய கணவன்-மனைவி ஒப்புக்கொண்டால் மற்றும் சமரச அதிகாரி தேவையில்லை என நீதிமன்றம் கருதினால், ‘ஹக்கம்’ இல்லாமலேயே மணமுறிவு நடைமுறையைத் தொடர ஷரியா நீதிமன்றத்திற்கு அதிகாரமளிக்கும்.

புதிய திருத்தத்தின் மூலம், மணமுறிவு தொடர்பான எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுள்ள தம்பதிகள், ஹக்கம் நடைமுறைகள், விசாரணைக்கு முந்தைய கலந்தாலோசனை மற்றும் நீதிமன்ற விசாரணைகள் இல்லாமல் சமரசக் கட்டத்திலேயே வழக்கை முடித்துக்கொள்ள முடியும்.

இதன் மூலம் அவர்களுக்கு ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேல் நேரம் மிச்சமாகும் என்று அமைச்சு மேலும் கூறியது. அதுமட்டுமன்றி, ஹக்கம் நியமனம் மற்றும் நீதிமன்ற உத்தரவுக் கட்டணங்களில் ஒவ்வொருவருக்கும் $172 வரை மிச்சமாகும்.

மே 25 முதல் ஜூன் 22 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட பொது ஆலோசனையைத் தொடர்ந்து, முஸ்லிம் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு திருத்தங்களில் இவையும் அடங்கும். அந்தத் திருத்தங்கள், விவாதத்திற்காக அக்டோபர் 6ல் தாக்கல் செய்யப்பட்டன.

குறிப்புச் சொற்கள்
முஸ்லிம்சட்டத் திருத்தம்நாடாளுமன்றம்