தென்கொரியாவில் 2024 டிசம்பர் மாதம் விமான விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து விமானம் மீது பறவை மோதும் சம்பவங்கள் பற்றி அதிகம் பேசப்படுகிறது.
தென்கொரியாவின் மூவான் அனைத்துலக விமான நிலையத்தில் தரை இறங்கிய ஜேஜு ஏர் விமானம் சுவர் மீது மோதி தீயில் கருகிய அந்த விபத்தில் விமானத்தில் இருந்த 179 பேர் உயிரிழந்தனர்.
பறவை மோதியதால் விபத்து ஏற்பட்டதாக அந்த விமானத்தின் ஒரு விமானி கூறியிருந்தார். அது உண்மைதானா என்று கண்டறிய அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் பறவை மோதியதால் கடுமையான சம்பவம் எதுவும் இதுவரை நிகழ்ந்ததில்லை என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் துணைத் தலைமை இயக்குநர் ஆலன் ஃபூ தெரிவித்துள்ளார்.
வனவிலங்கு தொடர்பான பாதுகாப்பு நிலவரங்களை சாங்கி விமானநிலையக் குழுமத்துடன் இணைந்து ஆணையம் கண்காணித்து வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் அவர் கூறினார்.
மேலும், வனவிலங்கு மூலம் ஏற்படும் ஆபத்துகளைத் தணிப்பதில் பொருத்தமான, பயனுள்ள நடவடிக்கைகள் இருப்பதை உறுதி செய்ய அந்தக் குழுமத்துடன் இணைந்து ஆணையம் பணியாற்றி வருவதாகவும் திரு ஃபூ கூறினார்.
இதற்கு முன்னர், விமானப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகத் தோன்றும் பெரிய பறவைகளை சுட்டுக்கொல்லும் பணிக்கு சிங்கப்பூர் துப்பாக்கிச்சுடும் சங்கம் நியமிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், அந்நடவடிக்கை விலங்குநல ஆர்வலர்கள் மற்றும் விலங்கியல் நிபுணர்களின் எதிர்ப்புக்கு ஆளானது.
தொடர்புடைய செய்திகள்
அதனால், 2015ஆம் ஆண்டு முதல் வான்வெளியில் பறவைகளைச் சுட்டு வீழ்த்துவது நிறுத்தப்பட்டு விட்டதாக அந்தச் சங்கம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் தெரிவித்தது.
இருப்பினும், விமானநிலைய ஓடுபாதைகளில் வனவிலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் கண்டறியவும் காணொளி ஆய்வு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த சாங்கி விமான நிலையக் குழுமம் முடிவெடுத்தது. அதனைத் தொடர்ந்து அந்தத் தொழில்நுட்பம் 2023 நவம்பர் முதல் சோதித்துப் பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும், விமானநிலைய வான்வெளிக்குள் பறவைகள் வராத அளவுக்கு அந்தக் குழுமம் பல்வேறு சாதனங்களைப் பயன்படுத்தி வருகிறது. பறவைகளைப் பயமுறுத்த, 3 கிலோமீட்டர் தூரம் வரை கேட்கக்கூடிய ஒலியை எழுப்பும் சாதனமும் அதில் அடங்கும்.
உலகம் முழுவதும் 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை விமானங்களை வனவிலங்கு தாக்கிய 270,000 சம்பவங்கள் பதிவானதாகவும் அவற்றில் 3 விழுக்காட்டுச் சம்பவங்களில் விமானப் பாகங்கள் சேதமடைந்ததாகவும் அனைத்துலக விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது.