ஹோர்முஸ் நீரிணை போன்ற அனைத்துலக நீர்நிலைகளில் கப்பல் போக்குவரத்துச் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுக்கும் நாடுகள் சரியான சமிக்ஞையை அனுப்புகின்றன என்று உலகளாவிய கப்பல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் ஐநா அமைப்பின் தலைவர் ஆர்செனியோ டொமிங்குவெஸ் கூறியுள்ளார். இந்த முக்கியமான கடல்துறை வழித்தடம் தொடர்பாக ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நீடிக்கும் முட்டுக்கட்டை, உலகப் பொருளியலுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனும் அச்சுறுத்தல் நிலவும் வேளையில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமையன்று (ஏப்ரல் 20) அனைத்துலகக் கடல்துறை அமைப்பின் தலைமைச் செயலாளர் டொமிங்குவேஸ் சிங்கப்பூர்ச் செய்தியாளர்களிடம் பேசினார். புவிசார் அரசியல் மோதல்களில் கப்பல் போக்குவரத்து பகடைக்காயாகப் பயன்படுத்தப்படுவது அதிகரித்துவருவது பற்றியும் அதன் பின்விளைவுகள் குறித்தும் அவர் எச்சரித்தார்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான இரண்டு வார காலப் போர்நிறுத்தம், கப்பல் போக்குவரத்துத் துறைக்குச் சற்று நிம்மதியைத் தரும் என்ற நம்பிக்கைகள் தகர்ந்து போயின. ஏப்ரல் 18ஆம் தேதி வார இறுதியில் சுருக்கமான மற்றும் குழப்பமான முறையில் வழித்தடம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் துறைமுகங்கள் மீதான தனது முற்றுகையை அமெரிக்கா தொடர்ந்து நீட்டித்ததோடு, ஈரானியச் சரக்குக் கப்பல் ஒன்றையும் கைப்பற்றியதால் அந்த நம்பிக்கைகள் பொய்த்துப் போயின.
புதன்கிழமையுடன் (ஏப்ரல் 22) முடிவடையவுள்ள அமெரிக்க-ஈரான் போர்நிறுத்தம் நீடிக்குமா என்ற நிச்சயமற்ற நிலை தற்போது நிலவுவதால், ஏப்ரல் 20ஆம் தேதியன்று ஹோர்முஸ் நீரிணை வழியான வணிகப் போக்குவரத்து மீண்டும் முழுமையாக முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. பாகிஸ்தானில் நடைபெறவிருந்த இரண்டாம் கட்டப் பேச்சுக்கான திட்டங்களும் இப்போது கேள்விக்குறியாகியுள்ளன.
தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டால், உரம் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத் தடையால் ஏற்படும் பாதிப்புகள் 2027ஆம் ஆண்டு வரை நீடிக்கக்கூடும். உலகளாவிய வர்த்தக நடவடிக்கைகளைச் சீரமைக்கும் பணிகள் தொடங்கும் வகையில் போர் முடிவுக்கு வந்தால் மட்டுமே அது சாத்தியம் என்று திரு டொமிங்குவெஸ் கூறினார். சிங்கப்பூர் கடல்துறை வார நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அவர் இங்கு வந்துள்ளார்.

