சம்பளத்தை 15 ஆண்டுகளாக மாற்றாமல் இருப்பது நியாயமற்றது: பிரதமர்

சம்பளத்தை 15 ஆண்டுகளாக மாற்றாமல் இருப்பது நியாயமற்றது: பிரதமர்

2 mins read
79efcec4-9615-4838-991b-a09fcf7f3d4b
காலவரையறை இன்றி மாற்றாமல் வைத்திருப்பது நியாயமானதன்று எனப் பிரதமர் லாரன்ஸ் வோங் வியாழக்கிழமை (செப்டம்பர் 10) தெரிவித்தார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாடு அமைச்சு

மாற்றிமைக்கப்பட்ட அரசியல் சம்பளக் கட்டமைப்பு  குறித்த விவாதத்தை நாடாளுமன்றத்தில் முடித்து வைத்துப் பேசிய பிரதமர் லாரன்ஸ் வோங், இதனைச் செய்வதற்கான ‘அரசியல் ரீதியான சாதகமான நேரம்’ ஒருபோதும் அமையப்போவதில்லை எனக் கூறினார்.

வியாழக்கிழமை (செப்டம்பர் 10) பேசிய திரு வோங், பெருகிவரும் ஊதிய இடைவெளியைச் சுட்டிக்காட்டி, அரசியல் பொறுப்பு வகிப்பவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான சம்பள மாற்றத்தை மூன்றாவது முறையாக ஒத்திவைப்பது சரியாக இருக்காது என்றார்.

“இந்த இடைவெளி எவ்வளவு பெரிதாகிறதோ, அதனைப் பின்னர் சரிசெய்வது அவ்வளவு கடினமாகிவிடும்,” என்று அவர் கூறினார்.

“ஒவ்வொரு கடினமான சூழ்நிலையும் செயல்படாமல் இருப்பதற்கான காரணமாக மாறினால், நாம் இப்பிரச்சினையைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்போம். பொறுமை என்பது ஒரு கட்டத்தில்  விவேகமாக இல்லாமல் புறக்கணிப்பாக மாறிவிடும்,” என்றும் பிரதமர் கூறினார்.

‘எம்ஆர்4’ தரநிலையில் உள்ள அமைச்சர்களுக்கான அடிப்படைச் சம்பளத்தை 1.8 மில்லியன் வெள்ளியாக உயர்த்த சுயேச்சைக் குழு பரிந்துரைத்துள்ளதாக பிரதமர் வோங் செவ்வாய்க்கிழமை அறிவித்தார். 

இந்தத் தொகை 2011ஆம் ஆண்டு முதல் 1.1 மில்லியன் வெள்ளியாகவே இருந்து வருகிறது.

ஆனால், அக்டோபர் 15ஆம் தேதி இப்புதிய கட்டமைப்பு நடப்புக்கு வரும்போது அமைச்சர்களின் சம்பளம் உடனடியாக இந்த அடிப்படைச் சம்பளத்திற்கு நிகராக உயர்த்தப்படாது.

மாறாக, சம்பளத்தில் 9 விழுக்காடு வரை ஒரு முறை மட்டுமே மாற்றம் செய்யப்படும்.

தமது முடிவைப் பற்றி மேலும் விளக்கிய பிரதமர், வெவ்வேறு சம்பள விகிதங்களைக் கொண்ட அனைத்து அமைச்சர்களுக்கும் தானாகவே சம்பளம் உயர்த்தப்படுவது சரியாக இருக்காது என்றார்.

சம்பளக் கட்டமைப்பு 15 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருப்பதைக் கருத்தில் கொண்டு, “அவர்களது சம்பளத்தைக் காலவரையறை இன்றி மாற்றாமல் வைத்திருப்பதும் நியாயமானதன்று,” என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய புதிய கட்டமைப்பின்கீழ், ஆண்டுக்கு 1.1 மில்லியன் வெள்ளி சம்பளம் பெறும் ‘எம்ஆர்4’ அமைச்சர், முழுமையான ஒன்பது விழுக்காடு மாற்றத்துடன் கிட்டத்தட்ட 1.2 மில்லியன் வெள்ளி சம்பளத்தைப் பெறுவார்.

சம்பளத்தை 1.8 மில்லியன் வெள்ளியாகக் கொண்டுவர மேற்கொண்டு எந்தச் சிறப்பு மாற்றங்களும் செய்யப்படாது. இனிவரும் ஊதிய உயர்வுகள் செயல்திறன் அடிப்படையிலேயே அமையும்.

குழு முன்மொழிந்த தொகையைவிட குறைவான ஒரு தொகையை அடிப்படைச் சம்பளமாகத் தேர்ந்தெடுக்கும் யோசனையையும் பிரதமர் வோங் நிராகரித்தார்.

“பொருத்தமான அடிப்படைச் சம்பளத்தை முடிவுசெய்ய தன்னிச்சைக் குழுவை நாம் நியமித்த பின், அந்தத் தொகை அரசியல் ரீதியாக தர்மசங்கடமாக இருக்கிறது என்பதற்காக அதன் முடிவை நமது விருப்பத்தின்பேரில் மாற்றக்கூடாது,” என்று அவர் மேலும் கூறினார்.

பணவீக்கத்தை மட்டும் கணக்கில் கொண்டாலே, ‘எம்ஆர்4’ குறிப்புச் சம்பளம் 1.5 மில்லியன் வெள்ளியாக இருந்திருக்கும் என்று அவர் கூறினார்.

அடிப்படைத் தொகையைத் தீர்மானிக்க, அதிக வருமானம் ஈட்டும் முதல் 1,000 சிங்கப்பூரர்களைக் கருத்தில் கொண்டு, பொதுச் சேவை நெறிமுறைக்காக அதில் 40 விழுக்காட்டுக் கழிவைச் செயல்படுத்தும் வழிமுறையை அக்குழு பயன்படுத்தியது.

“இந்த அடிப்படைத் தொகை என்பது, அந்த 1,000 பேரிடமிருந்து மட்டுமே நமது அரசியல் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க நாங்கள் கருதுகிறோம் என்பது அர்த்தமன்று,” என பிரதமர் வோங் விளக்கமளித்தார்.

குறிப்புச் சொற்கள்
பிரதமர்லாரன்ஸ் வோங்சம்பளம்அமைச்சர்