இத்தாலியக் கடற்படையில் 1931ஆம் ஆண்டு முதல் சேவையாற்றி வருகிறது அமெரிகோ வெஸ்புக்கி கப்பல்.
மூன்று மிகப்பெரிய பாய்மரங்களுடன் வேறொரு காலகட்டத்தைச் சேர்ந்த கப்பலைப்போன்ற வெளித்தோற்றம். ஆனால், உள்ளே அதிநவீன வசதிகளுடன் இத்தாலியக் கடற்படையின் வருங்காலக் கடலோடிகளுக்குப் பயிற்சி அளிப்பதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.
இதன் நீளம் 101 மீட்டர். எடை 4,200 டன்கள். ஒருகாலத்தில் உலகின் ஆக அழகான கப்பல் என்று வருணிக்கப்பட்ட அமெரிகோ வெஸ்புக்கி இப்போது சிங்கப்பூர் வந்துள்ளது.
உலகச் சுற்றுப்பயணத்தின் ஓர் அங்கமாக மரினா பே குரூஸ் சென்டருக்கு இக்கப்பல் வந்துள்ளது.
அக்டோபர் 24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பொதுமக்கள் இதை இலவசமாகச் சுற்றிப்பார்க்கலாம்.
இதற்கான பெரும்பாலான நுழைவுச்சீட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.
இவ்வாய்ப்பைத் தவறவிட்டவர்கள் வில்லாகியோ இத்தாலியா எனும் ஐந்து நாள் கண்காட்சிக்குச் சென்றுவரலாம்.
மரினா பே குரூஸ் சென்டரில் நடைபெறும் இக்கண்காட்சியில் இத்தாலியப் பொருள்கள், முதலீடு, ஆய்வு, தொழில்முனைப்பு தொடர்பான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
அமெரிகோ வெஸ்புக்கி கப்பல் பழங்கால முறைப்படி பாய்மரங்களின் உதவியுடன் கடலில் பயணம் செய்யும். மாற்று ஏற்பாடாக மின்சாரத்திலும் டீசலிலும் இயங்கும் இயந்திரமும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
இக்கப்பலை மையமாக வைத்து பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேல்விவரங்களுக்கு https://tourvespucci.it/en/singapore-24-28-october-2024/ என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.
இத்தாலியக் கடற்படைக் கழகத்தில் ஓராண்டை நிறைவுசெய்தோர் இக்கப்பலில் மூன்று மாதப் பயிற்சியை மேற்கொள்வர்.
தனது உலகப் பயணத்தை 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய அமெரிகோ வெஸ்புக்கி, 20 மாதங்களில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளுக்குச் செல்லத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இக்கப்பல் சிங்கப்பூரை அடுத்து இந்தோனீசியா செல்லவிருக்கிறது.