சாப்பிட வருபவர்களுக்கு குழாய் தண்ணீரை இலவசமாக வழங்க உணவு, பானக் கடைகளுக்கு சிலர் கோரிக்கை விடுத்துள்ளதாக ‘ஏஷியாஒன்’ இணையச் செய்தி தெரிவித்து உள்ளது.
அதனை வலியுறுத்தி மே 24ஆம் தேதி தொடங்கப்பட்ட கோரிக்கை மனுவில் 900க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு உள்ளனர்.
சிங்கப்பூரில் உள்ள உணவகங்கள் ஏற்கெனவே 10 விழுக்காடு சேவை வரி வசூலித்து வரும் நிலையில், அடிப்படைத் தேவையான தண்ணீரை கட்டணம் எதுவுமின்றி வழங்குமாறு உணவகங்களுக்கு அரசாங்கம் உத்தரவிட வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுயில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த கோரிக்கை மனுவை சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் உள்ளக மருந்துத் துறை ஆலோசகரான டாக்டர் யீ யுகாய் தயாரித்துள்ளதாக ஏஷியாஒன் தெரிவிக்கிறது. அந்த மனு Change.org இணையத்தளத்தில் உள்ளது.
உணவகங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு குடிநீரை இலவசமாக வழங்குவதற்குப் பதில், மென்பானங்களை காசு கொடுத்து வாங்க வலியுறுத்தும் போக்கு வளர்ந்து வருவதைத் தொடர்ந்து கோரிக்கை மனு யோசனை பிறந்ததாக அவர் தெரிவித்து உள்ளார்.
கடந்த வியாழக்கிழமை (ஜூன் 19) ஏஷியாஒன் இணையச் செய்தியிடம் பேசிய அவர், சிங்கப்பூரர்கள் தங்களது உணவில் இனிப்பைக் குறைக்குமாறு அரசாங்கம் வலியுறுத்தி வரும் நிலையில், உணவகங்கள் தங்களது சொந்த லாபத்திற்காக மென்பானங்களை விற்பதாகக் கூறினார்.
“அண்மையில் எனது குடும்பத்தை உணவகம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றேன். அங்கு ஒவ்வொருவரின் உணவுக்கும் $60 கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆயினும், குடிநீர் எதுவும் தரப்படவில்லை.
“அதற்குப் பதில், கூடுதலாக $5 கொடுத்தால் மென்பானங்கள் வழங்கப்படும் என்று அந்த உணவகம் தெரிவித்தது. இதனை மிதமிஞ்சிய ஒரு போக்காக நான் கருதுகிறேன்,” என்றார் டாக்டர் யீ.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரர்கள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 56 கிராம் சர்க்கரையை உட்கொள்வதாகவும் அதில் பாதிக்கும் மேற்பட்ட சர்க்கரை அவர்கள் அருந்தும் இனிப்புப் பானங்களில் இருப்பதாகவும் 2022ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேசிய சத்துணவு ஆய்வு தெரிவித்தது.
உணவகங்களில் குடிநீர் வழங்கப்படுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை புதிதல்ல. நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்பும் எதிர்த்தரப்பும் இதுபற்றிய யோசைனைத் தெரிவித்து உள்ளன.
குறிப்பாக, கிறிஸ்டஃபர் டி சூசா கடந்த 2021ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது சிங்கப்பூரின் குழாய்த் தண்ணீர் பாதுகாப்பானது என்பதால் உணவு, பானக் கடைகளில் அவற்றை இலவசமாக வழங்குவது கட்டாயமாக்கப்படுமா என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

