சிங்கப்பூரின் எரிசக்தி சிரமங்கள் குறித்து மக்கள் புரிந்துகொள்வது அவசியம்: இஎம்ஏ

சிங்கப்பூரின் எரிசக்தி சிரமங்கள் குறித்து மக்கள் புரிந்துகொள்வது அவசியம்: இஎம்ஏ

2 mins read
5dc7eeb9-2315-4744-b0cb-7d930bc34784
எரிசக்திச் சந்தை ஆணையம் புதிதாக நிறுவியுள்ள அணுவாற்றல் அலுவலகத்தின் இயக்குநர் டேரல் சான். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அணுவாற்றல் மூலமான எரிசக்தியை சிங்கப்பூர் ஏன் பரிசீலிக்கிறது என்பதன் மீதான பொதுமக்களின் புரிதலை மேம்படுத்துவது அவசியம்.

அப்போதுதான், சிங்கப்பூரின் எரிசக்தியில் உள்ள கட்டுப்பாடுகளையும் அதற்கு மாற்று எரிசக்தியை நாடுவதற்கான தேவையையும் அவர்கள் உணரமுடியும்.

எரிசக்திச் சந்தை ஆணையம் (இஎம்ஏ), அணுவாற்றலுக்கென புதிதாக நிறுவியுள்ள அலுவலகத்தின் இயக்குநர் பொறுப்பை ஏற்றுள்ள டேரல் சான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“உள்நாட்டில் எரிசக்தியில் நீடிக்கும் சிரமங்களைப் பொதுமக்கள் சரிவரப் புரிந்துகொள்ளாவிட்டால், எரிசக்தி இறக்குமதி, அணுவாற்றல் மூலமான எரிசக்தி போன்ற மாற்றுத் தெரிவுகளை நாடு ஏன் தேடுகிறது என்பதில் அவர்களுக்குப் புரிதல் இல்லாமல் போகலாம்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

“வளப் பற்றாக்குறை உள்ள நாட்டில் தண்ணீர்ப் பாதுகாப்பின் அவசியத்தைப் பெரும்பாலான சிங்கப்பூரர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், நாட்டின் எரிசக்திக்கான ஆதாரங்கள் பற்றியோ அதில் உள்ள கட்டுப்பாடுகள் பற்றியோ பலருக்கும் தெரிவதில்லை.

“மாறாக, சிங்கப்பூரின் எரிசக்தி ஆதாரம் குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. எடுத்துக்காட்டாக, நமது எரிசக்தியின் பிரதான மூலம் சூரியசக்தி என்பது பலரின் கருத்து.

“சிங்கப்பூர் அதன் எரிசக்தித் தேவையில் 95 விழுக்காடு இயற்கை எரிவாயு, புதைபடிவ எரிபொருள் ஆகியவற்றைச் சார்ந்தே உள்ளது. புதைபடிவ எரிபொருளை எரிப்பதால், புவியைச் சூடாக்கும் வெப்பம் வெளியாகிறது.

“ஆனால், 2050ஆம் ஆண்டுக்குள் அதுபோன்ற கரிம வெளியேற்றம் இல்லா நாடாக மாறும் இலக்கை நோக்கி சிங்கப்பூர் செயல்பட்டு வருகிறது.

“அந்த இலக்கை அடைய கரிம வெளியேற்றத்தை தடுத்தாக வேண்டும். சிங்கப்பூரின் மொத்த கரிம வெளியேற்றத்தில் எரிசக்தித் துறையின் பங்கு 40 விழுக்காடு.

“ஆனால், மாற்று எரிசக்தியில் சிங்கப்பூர் பின்தங்கிய நாடாக உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் தெரிவுகள் இங்கு குறைவாகவே உள்ளன.

“எனவேதான், நமது எரிசக்தித் தேவைகள் நிலையான, மீள்தன்மை கொண்ட மற்றும் செலவு குறைந்த முறையில் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்ய எரிசக்திச் சந்தை ஆணையம் பல்வேறு வழிகளை அடையாளம் கண்டுள்ளது,” என்று விவரித்தார் திரு டான்.

குறிப்புச் சொற்கள்