உணவங்காடி நிலையத்தில் காய்கறி சூப் வாங்கிய பெண் ஒருவர், தம் சாப்பாட்டில் பல்லி இருப்பதாக வாங்கிய கடைக்கு மீண்டும் சென்று தெரிவித்தார்.
அது பல்லி இல்லை, மீன் என்று கூறிச் சமாளித்துப் பார்த்தார் கடை ஊழியர்.
“சூப்பில் இருந்தது பல்லிதான். முழுப் பல்லி. பார்க்க அறுவறுப்பாக இருந்தது,” என்று திரு ஸெங் கூறினார்.
பிராஸ் பசா ரோட்டிலுள்ள லஸாடா ஒன் கடையில் தமது மகள் அந்தப் பதார்த்தத்தை வாங்கியதாகத் திரு ஸெங் கூறினார்.
ஜூலை 18ஆம் தேதி கிட்டத்தட்ட 1 மணிக்கு அந்தச் சாப்பாட்டை வாங்கியதாகத் திரு ஸெங், சாவ்பாவ் இதழிடம் தெரிவித்தார்.
“சாப்பாட்டைப் பாதியில் சாப்பிட்டு முடித்தபோது பல்லி இருந்தைக் கண்டார். அதை மீன் என்று கடை ஊழியர் தொடர்ந்து கூறிவந்தபோது என் மகள், நன்றாக பாருங்கள் என தொடர்ந்து கோரினார். இறுதியில் சாப்பாட்டின் விலையான 6.90 வெள்ளி அவருக்குத் திருப்பித் தரப்பட்டது.”
இந்தச் சம்பவம் நடந்ததைக் கடை ஊழியர் நுயென் தி லுவான், 41, உறுதி செய்தார். உட்கூரையிலிருந்த பல்லி விழுந்திருக்கக்கூடும் என்று அவர் கூறினார்.
இதற்காகத் தம் ஆழ்ந்த மன்னிப்பும் கேட்டுக்கொண்டதாக அந்த ஊழியர் கூறினார்.