தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஊழியர்களுக்காகத் திறம்பட குரல்கொடுப்பேன்: ஜெகதீஸ்வரன் நம்பிக்கை

3 mins read
அல்ஜுனிட் குழுத்தொகுதியின் தமிழ் பேசும் வேட்பாளர்
7a86f20d-2b0c-4b8d-b1a2-da095a7a0783
திங்கட்கிழமை (ஏப்ரல் 28) நடைபெற்ற ஃபுல்லர்ட்டன் பிரசாரக் கூட்டத்தில் தமிழில் உரையாற்றிய மக்கள் செயல் கட்சி வேட்பாளர் ஜெகதீஸ்வரன் ராஜு. - படம்: பெரித்தா ஹரியான்

அல்ஜுனிட் குழுத்தொகுதி மக்கள் செயல் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டபோது, அங்கு போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்று 38 வயது திரு ஜெகதீஸ்வரன் ராஜுவிடம் பலரும் அக்கறையோடு கூறினர்.

“போட்டிமிக்க களம், உங்களிடம் சிரித்துப் பேசமாட்டார்களே என்று பலர் என்னிடம் கூறினர். என்றாலும், அந்த வட்டாரத்தில் பலர் மகிழ்ச்சியுடன் பணிவாகப் பேசி என்னை வரவேற்றனர்,” என்றார் அவர்.

ஹாலந்து - புக்கிட் தீமா குழுத்தொகுதியின் ஸெங்ஹுவா மசெக கிளையில் கிட்டத்தட்ட 15 ஆண்டு சேவைக்குப் பிறகு, கடந்த ஆண்டு முதல் அல்ஜுனிட் குழுத்தொகுதியின் யூனோஸ் மசெக கிளையில் இவர் செயல்பட்டு வருகிறார்.

“மக்களுக்குத்தான் சேவை ஆற்றுகிறோம். புதிய இடத்தில் மக்களைச் சந்தித்து அவர்களது பிரச்சினைகளைத் தெரிந்துகொள்வதுடன் அவர்களது வசிப்பிடத்தை மேலும் மேம்படுத்துவது குறித்துத் திட்டமிடுவோம்,” என்று திரு ஜெகதீஸ்வரன் கூறினார்.

பல்வேறு துறைகளில் பத்தாண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவம் உள்ளோரைக் கொண்டிருக்கும் இளம் அணியில் இவர் அங்கம் வகிக்கிறார்.

“எங்கள் அணியினருக்கு ஒட்டுமொத்தமாக 75 ஆண்டு வேலை அனுபவம் உள்ளது. எங்கள் அனுபவமும் பலதரப்பட்டது. மூவர் சுற்றுச்சூழல் கட்டமைப்பில் அனுபவம் பெற்றவர்கள். மற்றொருவர் மருத்துவத்துறை அனுபவம் உள்ளவர். தொழிற்சங்கவாதியான நான், அல்ஜுனிட் வட்டார ஊழியர்களுக்கான திட்டங்களை முன்னெடுப்பதில் உதவுவேன்,” என்றார் திரு ஜெகதீஸ்வரன்.

மக்களுக்குப் பயனளிக்கும் தொழிற்சங்க அனுபவம்

அல்ஜுனிட் குழுத்தொகுதியில் போட்டியிடுவோரில் தமிழில் சரளமாகப் பேசக்கூடிய ஒரே வேட்பாளர் என்ற முறையில், தமிழ்மொழி தம் வாழ்க்கைக்கு வளம் சேர்த்திருப்பதாகக் கூறுகிறார் ஜெகதீஸ்வரன் ராஜு.
அல்ஜுனிட் குழுத்தொகுதியில் போட்டியிடுவோரில் தமிழில் சரளமாகப் பேசக்கூடிய ஒரே வேட்பாளர் என்ற முறையில், தமிழ்மொழி தம் வாழ்க்கைக்கு வளம் சேர்த்திருப்பதாகக் கூறுகிறார் ஜெகதீஸ்வரன் ராஜு. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“நிறுவனங்களின் நலனை மட்டும் கருதாது, ஊழியர்களின் நலனையும் கருதுவதால் மசெகவுடன் தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் இணக்கம் பாராட்டுகிறது. இந்தக் கூட்டுறவு வழியாக சமூக அமைதியும் பொருளியல் வளர்ச்சியும் மேம்படுகின்றன.

“மாற்றங்கள் நிறைந்த இக்காலச் சூழலில், வர்த்தக வரிப் பிரச்சினையால் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படலாம். என்றாலும், மசெகவைப் பொறுத்தமட்டில், எப்போதுமே மக்களுக்கு வேலை வாய்ப்புகளைத் தரும் திட்டங்களைக் கொண்டுள்ளது.

“நாங்கள் தொடர்ந்து மக்களுக்குத் தேவைப்படும் உதவிகளைத் தொடர்ந்து செய்வோம். வேலை வாய்ப்புகளைக் கண்டறிந்து தருவதுடன் பயிற்சித் திட்டங்களையும் அறிமுகப்படுத்துவோம்,” என்றார் திரு ஜெகதீஸ்வரன்.

நாடாளுமன்றத்தில் தமிழில் பேசுவேன்

ஏப்ரல் 28ஆம் தேதி ஃபுல்லர்ட்டன் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய திரு ஜெகதீஸ்வரன்.
ஏப்ரல் 28ஆம் தேதி ஃபுல்லர்ட்டன் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய திரு ஜெகதீஸ்வரன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அல்ஜுனிட் குழுத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் தமிழில் சரளமாகப் பேசக்கூடிய ஒரே வேட்பாளர் என்ற முறையில், தமிழ்மொழி தம் வாழ்க்கைக்கு வளம் சேர்த்திருப்பதாகக் கூறினார் திரு ஜெகதீஸ்வரன்.

“வீட்டில் தமிழில் பேசுவதால் என்னால் பொதுமேடையில் சரளமாகப் பேச முடிகிறது. தமிழ் எனக்குப் பலருடன் இணக்கத்தை ஏற்படுத்தித் தருகிறது,” என்று அவர் குறிப்பிட்டார். 

அல்ஜுனிட் குழுத்தொகுதியில் தேசிய சராசரி அளவில் இந்தியர்கள் வசிப்பதாகக் குறிப்பிட்ட அவர், தமிழ் பேசுபவர்கள் பலரையும் சந்தித்து வருகிறார்.

“தமிழ் பேசும் இந்தியர்களைச் சந்திக்கும்போது அவர்களுடன் தமிழிலேயே பேசுகிறேன். அதனால், அவர்களுடன் உறவை ஏற்படுத்திக்கொள்ள முடிகிறது,” என்றார் அவர்.

வயதான சீனர்களிடமும் மலாய்க்காரர்களிடமும் அவரவர் மொழிகளில் தெரிந்த அளவுக்குப் பேசுவதாகவும் அந்த மொழிகளைத் தம்மால் முழுமையாகப் பேச இயலாதபோதும் அந்த முயற்சியைப் பிற இனத்தவர்கள் வரவேற்பதாகவும் திரு ஜெகதீஸ்வரன் குறிப்பிட்டார்.

பிரசாரங்களிலும் செய்தியாளர் சந்திப்புகளிலும் அடிக்கடி தமிழில் பேசும் திரு ஜெகதீஸ்வரன், அதற்காகத் தமிழர்கள் பலர் தம்மைப் பாராட்டுவது நெகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டார்.

“நாடாளுமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் மன்றத்தில் நிச்சயமாகத் தமிழில் உரையாற்றுவேன்,” என்றும் உறுதியாகக் கூறினார் இந்தப் புதுமுக வேட்பாளர்.

குறிப்புச் சொற்கள்