தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எம்.பி.க்கள் தொழிற்சங்கத்திலும் திறம்படச் செயலாற்றலாம்: ஜெகதீஸ்வரன் ராஜு

2 mins read
4f656a39-c8c8-4d6b-967a-1d8d2e8b1c5f
அல்ஜுனிட் குழுத்தொகுதிக்கான மக்கள் செயல் கட்சி உறுப்பினர்கள், சிராங்கூன் நார்த் வட்டாரத்தில் பொதுமக்களுடன் கலந்துறவாடினர். - படம்: கி.ஜனார்த்தனன்

ஊழியர்களுக்கு உதவி செய்வதே தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) இருப்பதற்கான அடிப்படைக் காரணம் என்று அல்ஜுனிட் குழுத்தொகுதிக்கான மக்கள் செயல் கட்சி வேட்பாளர் ஜெகதீஸ்வரன் ராஜு தெரிவித்திருக்கிறார்.

தேர்தலில் தோற்கும் மக்கள் செயல் கட்சி வேட்பாளர்களுக்குப் பாதுகாப்பு அடைக்கலமாக என்டியுசி இருப்பதாகப் பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் வருணித்தது குறித்து கேட்டதற்கு திரு ஜெகதீஸ்வரன் இவ்வாறு பதிலளித்தார்

திரு ஜெகதீஸ்வரன் ராஜு, டாக்டர் ஃபைஷால் அப்துல் அஸிஸ், திரு டேனியல் லியு, திருவாட்டி சான் ஹுய் யூ, டாக்டர் ஏட்ரியன் ஆங் ஆகியோர் அங்கம் வகிக்கும் அல்ஜுனிட் குழுத்தொகுதிக்கான மசெக அணி, சிராங்கூன் நார்த் வட்டாரத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) காலையில் பொதுமக்களைச் சந்தித்தது.

என்டியுசியில் பதவி வகிக்கும் மக்கள் செயல் கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்குப் பதிலாக தொழிற்சங்கப் பொறுப்புகளை கவனிக்கும்படி திரு சிங் கூறியதற்கு திரு டேனியல் லியூ பதிலளித்தார்.

“இது மக்கள் செயல் கட்சிக்கும் பாட்டாளிக் கட்சிக்கும் இடையே நிலவும் போட்டியாக நாங்கள் பார்க்கவில்லை. வட்டாரவாசிகள் மீதுதான் எங்கள் கவனம் உள்ளது,” என்று அவர் கூறினார்.

“நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களது சொந்த வேலைகளில் இருந்தபடியே அந்தப் பொறுப்பை நிறைவேற்றுகின்றனர். அதுபோல, தொழிற்சங்கப் பொறுப்புகளில் உள்ளவர்களும் அவற்றை நிறைவேற்றுவர்,” என்று திரு ஜெகதீஸ்வரன் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

தற்போது சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணைய ஊழியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளரும் தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் தன்னுரிமைத் தொழிலாளர்களுக்கும் சுயதொழில் செய்பவருக்குமான பிரிவின் உதவி இயக்குநராகவும் திரு ஜெகதீஸ்வரன் செயல்பட்டு வருகிறார்.

குறிப்புச் சொற்கள்
மக்கள் செயல் கட்சிதொழிற்சங்கம்நாடாளுமன்ற உறுப்பினர்வேட்பாளர்