நீதிமன்ற நடவடிக்கையின் போக்கில் இடையூறு விளைவிக்க முயன்ற வழக்கறிஞர் இருவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
வீ ஹோங் ஷென், 37, என்ற வழக்கறிஞருக்கு ஏழு மாதச் சிறைத்தண்டனையும் ஓங் பெங் பூன், 68, என்ற வழக்கறிஞருக்கு ஓராண்டுச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டன.
கடந்த 2019 மே மாதம் கள்ள சிகரெட் தொடர்பில் வீ, தமது முன்னைய நேரடி மேற்பார்வையாளரான ஓங்கிற்கு மறைபொருளுடன் கூடிய குறுஞ்செய்தி அனுப்பினார்.
அச்செய்தியை ஓங், டான் ஹாக் ஆன் என்பவருக்கு அனுப்பிவைத்தார். தீர்வை செலுத்தப்படாத சிகரெட் தொடர்பில் 2019 ஆகஸ்ட்டில் டான் கைதுசெய்யப்பட்டார்.
நீதிமன்ற நடவடிக்கையில் இடையூறு விளைவிக்கும் நோக்கத்துடன் முயன்றதன் தொடர்பில் வீயும் ஓங்கும் குற்றவாளிகள் என்று மாவட்ட நீதிபதி மர்வின் பே இவ்வாண்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்திருந்தார்.
இந்நிலையில், திங்கட்கிழமையன்று தண்டனைத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி பே, அவ்விரு சட்ட வல்லுநர்களுக்கும் நீதியை நிலைநாட்டும், நீதித்துறை நடவடிக்கைகளுக்கு வழிவகை செய்யும் கடமையுள்ளது எனக் குறிப்பிட்டார்.
கடந்த 2019 மே 10ஆம் தேதி முற்பகல் 11.53 மணிக்கு, வீ மறைபொருளுடன் கூடிய குறுஞ்செய்தியை டானுக்கு அனுப்பி வைத்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
அதற்குச் சற்று முன்னதாகத் தான் வீ, செல்வ குமார் சுப்பிரமணியன் என்பவர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தார். தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் தொடர்பில் செல்வாமீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
வீயிடமிருந்து வந்த குறுஞ்செய்தியை டானுக்கு அனுப்பினார் ஓங். செல்வா சார்பில் வாதாட டான்தான் ஓங்கை அணுகியதாகத் தெரிவிக்கப்பட்டது.
‘படித்ததும் அழித்துவிடவும்’ என மேலும் ஒரு குறுஞ்செய்தியை ஓங், டானுக்கு அனுப்பினார்.
வேறு பொருளை மறைமுகமாக உணர்த்தும் வகையில் ‘ஆ பூன்’, ‘பஃப்லோ’, ‘ஃபேக்டரி’ போன்ற சொற்கள் அக்குறுஞ்செய்தியில் இடம்பெற்றதாகக் கூறப்பட்டது.
கள்ள சிகரெட் கும்பலைச் சேர்ந்த டான், செல்வா, டோ சின் வென், லிம் சீ சியாங் போன்றோர் தொடர்பான வழக்குகளின் தீர்ப்புகள் குறித்த விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
ஆயினும், தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கையாளும் கும்பலுக்கும் அந்தக் குறுஞ்செய்திக்கும் தொடர்பிருப்பது தெளிவாகத் தெரிகிறது என்று அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் கூறினர்.
இதனிடையே, தங்கள்மீதான தீர்ப்பையும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும் எதிர்த்து ஓங்கும் வீயும் மேல்முறையீடு செய்யவுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


