தம்முடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள கத்திமுனையில் பெண்ணை மிரட்டிய ஆடவருக்கு சிறைத் தண்டனையும் பிரம்படிகளும் விதிக்கப்பட்டு உள்ளன.
முகம்மது ஷாருல் நிஸாம் ஸுல்கிஃப்லி, 23, எனப்படும் இளையருக்கு புதன்கிழமை (ஆகஸ்ட் 28) மூவாண்டு, 20 வார சிறைத் தண்டனையோடு ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
இரு குற்றவியல் அச்சுறுத்தல் குற்றச்சாட்டுகள், ஒரு மானபங்கக் குற்றச்சாட்டு, அந்தரங்கப் படங்களை வெளியிடுவதாக மிரட்டிய ஒரு குற்றச்சாட்டு ஆகியவற்றை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கான தண்டனை அறிவிக்கப்பட்டது.
இதர மூன்று குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கப்பட்டபோது கவனத்தில் கொள்ளப்பட்டன.
பாதிக்கப்பட்ட பெண்ணை அவர் படிக்கும் பள்ளிக்கு வெளியே 2023 மே 4ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் ஷாருல் சந்தித்தார். தமது வீட்டுக்கு வரச் சொல்லி பெண்ணை வற்புறுத்தினார்.
அதற்கு மறுக்கவே, பெண்ணின் நிர்வாணப் படங்களை அவரது தந்தைக்கு அனுப்பப்போவதாக மிரட்டினார்.
ஒருவழியாக வீட்டுக்கு அழைத்துச் சென்ற ஷாருல் கத்திமுனையில் அந்த பெண்ணுடன் வலுக்கட்டாயமாகப் பாலியல் உறவுகொள்ள முயன்றார். பெண்ணின் உள்ளாடைகளை அவிழ்த்து உடலில் முத்தமிட்டார். பெண் அலறவே தமது செய்கையை அவர் நிறுத்தினார்.
2023 மே 7ஆம் தேதி ஷாருல் காவல்துறையிடம் சரணடைந்தார்.
தொடர்புடைய செய்திகள்
பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தைக் காக்கும் பொருட்டு அவரது பெயரும் ஷாருலுடன் அவருக்கு இருந்த உறவு குறித்தும் வெளியிட நீதிமன்றம் அனுமதிக்கவில்லை.

