விற்பனை செய்யும் நோக்கத்துடன் உரிமமற்ற இடத்தில் விலங்குகளை மறைத்துவைத்திருந்த குற்றத்துக்கு ஒரு 28 வயது மாதுக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதுபோன்ற வழக்கு இதுவே முதன்முறையாக சிங்கப்பூரில் விசாரிக்கப்பட்டதாக அறியப்படுகிறது. விலங்குகள், பறவைகள் சட்டப்படி தங்கள்மீது சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளையும் தம்பதியர் ஒப்புக்கொண்டனர்.
சட்டவிரோதமாக நாய்க்குட்டிகளை மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் கடத்திய குற்றத்துக்காக இங் சியு டெங் என்ற மாதும் கலர்ன் லிம் என்ற அவரது 34 வயது கணவரும் 2023 டிசம்பர் 27ஆம் தேதி கைதுசெய்யப்பட்டனர்.
மாதுக்கு 19 வாரங்கள் 3 நாள்கள் சிறையும் $5,000 அதிகபட்ச அபராதமும் ஆக்ஸ்ட் 5ஆம் தேதி விதிக்கப்பட்டது. ஆடவருக்குக் கடந்தவாரம் வெள்ளிக்கிமை (செப்டம்பர் 11) அதே தண்டனை விதிக்கப்பட்டது.
உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில், குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணைய (ஐசிஏ) அதிகாரிகள் அத்தம்பதியரின் நண்பரின் வாகனத்தில் இரண்டு மாத வயதுடைய பொமிரேனியன் வகை நாய்க்குட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர். அதன் விவரங்களைத் தேசியப் பூங்காக் கழகம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) வெளியிட்ட அறிக்கையில் விவரித்தது.
நாய்களைத் தம்பதியர் வீட்டில் சட்டவிரோதமாக வைத்திருந்ததோடு அது குறித்து இன்ஸ்டகிராம் சமூக ஊடகத்தில் விளம்பரமும் செய்தனர்.
தம்பதியர் வாழ்ந்த அடுக்குமாடிக் கட்டடத்தின் கீழ்த்தளத்தில் அவற்றைப் பார்வையிட வருவோர்கள் அழைக்கப்பட்டனர்.
2023ஆம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் மட்டும் 21 நாய்க்குட்டிகளை விற்பனை செய்து தம்பதியர் S$21,000ஐ ஈட்டினர்.
பிரையன் பெ என்ற 23 வயது நண்பர் அந்தத் தம்பதியுடன் இணைந்து மலேசியாவிலிருந்து ஐந்து நாய்க்குட்டிகளை சிங்கப்பூருக்குக் கடத்தி வந்து விற்பனை செய்ய உதவியது விசாரணையில் தெரியவந்தது.அவருக்கு ஜனவரி மாதம் 16 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடத்தல் சம்பவத்துக்குப் பிறகு நடந்த மருத்துவ சோதனையில் அந்நாய்க்குட்டிகளுக்கு ஒருவித அபாயமான கிருமித்தொற்று பரவியிருந்ததும் தெரியவந்தது.
இதேபோன்ற தனிப்பட்ட வழக்கில் ஆகஸ்ட் 17ஆம் தேதி 33 வயது சுந்தர பாண்டியன் என்ற ஆடவருக்கு உரிமமற்ற இடத்தில் விலங்குகளை விற்பனைக்கு வைத்திருந்த குற்றத்துக்கு இரண்டு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
