ஆர்ச்சர்ட் ரோட்டில் 2022ஆம் ஆண்டு நிகழ்ந்த கைகலப்பில் ஆகக் கடைசிக் குற்றவாளிக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
அவரது இரு சகோதரர்களுக்கு ஏற்கெனவே இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் தண்டனை விதிக்கப்பட்டு விட்டது.
2022 ஆகஸ்ட் 14ஆம் தேதி விடியற்காலை 5 மணியளவில் ஆர்ச்சர்ட் டவர்ஸ் கட்டடம் அருகே அந்தச் சண்டை நிகழ்ந்தது.
அந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.
சண்டையில் ஈடுபட்ட கும்பலில் மூன்று சகோதரர்கள் இடம்பெற்று இருந்தனர். அவர்களில் ஒருவரான முஹம்மது ஃபிக்ரி ஜுனைடி, 24, என்பவருக்கு திங்கட்கிழமை (செப்டம்பர் 30) ஈராண்டு, ஒரு மாதம் சிறைத் தண்டனையும் $800 அபராதமும் விதிக்கப்பட்டன.
சட்டவிரோதக் கும்பலில் இடம்பெற்று இருந்ததாகவும் கலவரம் விளைவித்ததாகவும் சுமத்தப்பட்ட குற்றங்களை அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து தண்டனை அறிவிக்கப்பட்டது.
மோதல் சம்பவத்துக்குத் தொடர்பில்லாத, கணினியைத் தவறாகப் பயன்படுத்திய இரு குற்றச்சாட்டுகளையும் ஃபிக்ரி ஒப்புக்கொண்டார்.
சண்டை நிகழ்ந்தபோது அவரது சகோதர்களில் ஒருவரான முகம்மது ஃபைஸ் ஜுனைடி, 31, சட்டவிரோதக் கும்பலின் மூத்த உறுப்பினராகச் செயல்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
ஆகஸ்ட் 29ஆம் தேதி அவருக்கு 15 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மின்சிகரெட் தொடர்பான குற்ச்சாட்டுகளுக்காக அவருக்கு $10,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
மூன்றாவது சகோதரரான முஹம்மது ஃபட்ஸ்லி ஜுனைடி, 36, என்பவருக்கு ஆகஸ்ட் 7ஆம் தேதி 18 மாத சிறைத் தண்டனையும் $15,000 அபராதமும் விதிக்கப்பட்டன.
அந்த மூன்று சகோதரர்களுடன் இதர நால்வரும் சண்டையில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் ஒரே சட்டவிரோதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சோய் ஹாப்பி எனப்படும் மதுபானக்கூடத்தில் ஃபைஸுக்கும் மிர்ஸா அப்துல் அஸ்மான் என்று அடையாளம் காணப்பட்ட ஆடவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஃபைஸை மிர்ஸா உதைத்தபோது கும்பலின் மற்றவர்களும் சேர்ந்து மிஸ்ராவைத் தாக்கினர். அப்போது மிர்ஸாவுக்கு ஆதரவாக வந்த அப்துல் ஃபிகோ அப்துல் ஹலீம் என்பவரையும் தாக்கினர்.
தொடர்ந்து, மிர்ஸாவும் அப்துல் ஃபிகோவும் வெவ்வேறு திசைகளில் ஓடினர். அவர்களைத் தொடர்ந்து சென்று கும்பல் தாக்கியதால் கிளேமோர் டிரைவ், கிளேமோர் ரோடு பகுதிகளில் ஒரே குண்டர் கூட்டமாகக் காணப்பட்டது.
பலத்த காயமடைந்த இருவரும் கிளேமோர் ரோட்டில் விழுந்து கிடந்தனர். அவர்களுக்கு பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டது.