உரிமம் இல்லாது கடன் கொடுத்தவருக்குச் சிறை, அபராதம்

1 mins read
03da3d3b-fc8e-4f76-bafe-515e0877dbae
நீதிமன்றம் - Pixabay - qimono

உரிமம் இல்லாது கடன் கொடுத்தவருக்கு ஏழு மாதச் சிறைத் தண்டனையும் $30,000 அபராதமும் விதிக்கப்பட்டன.

சிங்கப்பூரரான 47 வயது ஸ்டான்லி சுரேஷ் நடராஜா, பல பணிப்பெண்களுக்கு 15 விழுக்காடு வட்டியுடன் கூடிய கடன் கொடுத்தார்.

அடைக்கப்படாத கடனை வசூலிக்க பணிப்பெண் ஒருவரின் முதலாளியின் வீட்டிற்கு அவர் சென்ற பிறகு ஸ்டான்லி பிடிபட்டார். அந்த வீட்டைச் சேர்ந்தவர்களில் ஒருவர் காவல்துறையில் புகார் செய்ததை அடுத்து ஸ்டான்லி கைது செய்யப்பட்டார்.

உரிமம் இல்லாது கடன் கொடுத்த குற்றத்தை திங்கட்கிழமை (ஜூன் 23) ஸ்டான்லி ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

அபராதத் தொகையை அவர் செலுத்தாவிடில் கூடுதல் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

2021ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் குறைந்தது $5,900 மதிக்கத்தக்க 19 கடன்களை அவர் கொடுத்தார். அவற்றின் மூலம் அவருக்கு $885 வட்டி கிடைத்தது.

பள்ளிப் பேருந்து ஓட்டுநராக ஸ்டான்லி பணிபுரிந்ததாகவும் கீழே விழுந்து படுகாயம் அடைந்த பிறகு, உரிமம் இல்லாது கடன் கொடுப்பதை 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அவர் தொடங்கியதாகவும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தமது மருத்துவக் கட்டணங்களுக்காகவும் அன்றாடச் செலவுகளுக்காகவும் பணம் தேவைப்பட்டதால் ஸ்டான்லி உரிமம் இல்லாது கடன் கொடுப்பதைத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

முதலில் தமது மனைவியின் நண்பர்களுக்கு அவர் கடன் கொடுத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்