துவாஸ் பகுதியில் 10 லாரிகள் நிறையக் கோழி எருவைச் சட்டவிரோதமான முறையில் வீசுவதற்குத் தள மேலாளர் ஒருவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற போக்குவரத்து நிறுவன இயக்குநர் ஒருவருக்கு ஐந்து நாள்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கேஒய்டி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் இயக்குநரான 40 வயது கீ யுவேட் டிங், ஊழல் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை அடுத்து, வியாழக்கிழமை (அக்டோபர் 15) அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
இவரது நிறுவனம் லாரிகள் மூலம் மண் மற்றும் எருவைக் கொண்டு சேர்க்கும் சேவையை வழங்கி வருகிறது. 2024ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி, இரு கோழிப்பண்ணைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட கோழி எருவைக் கீ ஒரு காய்கறிப் பண்ணைக்கு விற்க முயன்றார்.
ஆனால், அந்தப் பண்ணை அதனை ஏற்றுக்கொள்ள மறுத்ததால், அதனை அப்புறப்படுத்துவதற்காகத் துவாஸ் பகுதியில் அவர் இடத்தைத் தேடி அலைந்துள்ளார். அப்போது, தேசியச் சுற்றுப்புற அமைப்பின் கழிவு மேலாண்மை மையத்திற்காகக் கட்டுமானப் பொருள்களை வைக்கும் இடத்தை அவர் கண்டறிந்தார்.
கடுமையான துர்நாற்றம் வீசும் அந்தக் கோழி எருவை அங்கே சட்டவிரோதமாகக் கொட்டுவதற்கு, ஒவ்வொரு லாரிக்கும் $50 வெள்ளி தருவதாக அந்த இடத்தின் தள மேலாளரிடம் கீ லஞ்சம் தர முயன்றார்.
அது சட்டவிரோதமானது என்பதால் தள மேலாளர் தொடக்கத்தில் அதனை ஏற்க மறுத்தபோதிலும், கீ மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டதால் இறுதியில் சம்மதித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஜூன் 22ஆம் தேதி ஆறு லாரிகள் நிறையக் கோழி எரு அங்கே கொண்டு செல்லப்பட்டு கொட்டப்பட்டது. தள மேலாளர் மண் தோண்டும் இயந்திரத்தைப் பயன்படுத்தி குழி தோண்டி, அதில் எருவைக் கொட்டி பின்னர் அதன் மேல் புதிய மண்ணைப் போட்டு மூடியுள்ளார்.
மறுநாள், ஜூன் 23ஆம் தேதி மேலும் நான்கு லாரிகளில் கோழி எரு கொண்டுவரப்பட்டது. எனினும், மூன்றாவது லாரியிலிருந்து எரு கொட்டப்பட்டுக் கொண்டிருந்தபோது, அந்த இடத்தை வாடகைக்கு எடுத்திருந்த பொறியியல் நிறுவனம் இந்தச் சட்டவிரோதச் செயலைக் கண்டுபிடித்தது.
