மதுபோதையில் காவல் அதிகாரிகள்மீது தகாத வார்த்தைகளைப் பயன்படுத்திய ஆஸ்திரேலிய ஆடவர் ஒருவருக்கு மூன்று வாரங்கள் சிறைத் தண்டனையும் $2,500 அபராதமும் விதிக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டு நவம்பரில் கைதானபோதும் அவர் மீண்டும் குற்றம் புரிந்தார். காவல் அதிகாரிகளில் ஒருவரைக் கொல்லப்போவதாக அவர் கூறியிருந்தார்.
பிணையில் விடுவிக்கப்பட்ட கோன்ரட் டிரம்மண்ட் கிளார்க்சன், 32, 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் மது அருந்த சென்றிருந்தார். மதுபோதையில் தகராறு செய்ததற்காகவும் கட்டணம் செலுத்த தவறியதற்காகவும் அவர் மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.
2022ஆம் ஆண்டு ஜூன் மாதம், அவர் மது அருந்திவிட்டு இரண்டு காவல் அதிகாரிகள்மீது தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.
தொல்லை கொடுத்ததற்கான இரண்டு குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். தீர்ப்பு வழங்கப்பட்டபோது மற்ற ஏழு குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.