கட்டுமான நிறுவனம் ஒன்றின் பொறியாளருக்குப் பணம் தேவைப்பட்டதால், $343,000க்கும் அதிக மதிப்புள்ள எஃகு வலுவூட்டும் கம்பிகளை அதிகப்படியாக வாங்கி, பின்னர் உலோக வணிகர் ஒருவரிடம் அவற்றை விற்று $200,000க்குமேல் பெற்றுக்கொண்டார்.
அதிகப்படியான அந்தக் கம்பிகளின் மொத்த எடை 800 டன்னுக்கும் அதிகம்.
குற்றம் புரிந்தபோது, பென்டா-ஓஷன் பச்சி சோலடாஞ்ச் ஜாயிண்ட் வெஞ்சர் நிறுவனத்தில் அல் ஹிதாயத் ஒஸ்மான் ஊழியராக இருந்தார்.
நீதிமன்ற ஆவணங்களின்படி, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதைக்காக ஆர்ச்சர்ட் எம்ஆர்டி நிலையத்தையும் சுரங்கப் பாதைகளையும் அமைப்பதற்கான முக்கிய ஒப்பந்ததாரராக 2014 ஜூலையில் நிலப் போக்குவரத்து ஆணையத்தால் அந்நிறுவனம் ஈடுபடுத்தப்பட்டது.
2016 ஜனவரி முதல் ஜூன் வரை 14 சந்தர்ப்பங்களில் இந்தக் குற்றத்தைப் புரிந்த அல் ஹிதாயத், 40, நம்பிக்கை மோசடி குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, திங்கட்கிழமை (ஜனவரி 27) அவருக்கு ஈராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரரான அவர் இதுவரை பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை.

