தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தூங்கும் பயணிகளிடமிருந்து ரோலெக்ஸ் கடிகாரங்களைத் திருடிய டாக்சி ஓட்டுநருக்குச் சிறை

3 mins read
948d5b94-3867-4505-b739-13b33b3e1df8
மைக்கல் ராஜ் தனது 70 வயது தாயாரின் நகைகளையும் திருடியுள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நிதிப் பிரச்சினையில் சிக்கிக்கொண்ட டாக்சி ஓட்டுநர் ஒருவர், வெவ்வேறு சம்பவங்களில் தூங்கிக்கொண்டிருந்த மூன்று பயணிகளிடமிருந்து அவர்களின் $200,000க்கு மேற்பட்ட மதிப்புள்ள ரோலெக்ஸ் கைக்கடிகாரங்களைத் திருடினார். பின்னர் அவற்றை விற்றுவிட்டார்.

48 வயதான மைக்கல் ராஜ், தனது 70 வயது தாயாரிடமிருந்து கிட்டத்தட்ட $43,400 மதிப்புள்ள 13 நகைகளையும் திருடியுள்ளார்.

நான்கு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட திரு மைக்கலுக்கு ஜூலை 30ஆம் தேதி, ஓராண்டு, ஐந்து மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மே மற்றும் ஜூன் 2021க்கு இடையில் அவர் தனது தாயின் நகைகளைத் திருடியதிலிருந்து அவரது குற்றச்செயல் தொடங்கியது.

“இது பாதிக்கப்பட்ட ஒருவர் கவனக்குறைவாக விலைமதிப்பற்ற பொருள்களை திறந்த வெளியில் விட்டுச் சென்ற வழக்கு அல்ல,” என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் டான் ஷி யுன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்டவரின் நகைகள் அலமாரியில் உள்ள இழுப்பறையில் (Drawer) பூட்டப்பட்டு, அதன் சாவி அதே அலமாரியில் உள்ள மற்றொரு இழுப்பறையில் வைக்கப்பட்டிருந்தது,” என்றார் திரு டான்.

அதன் பிறகு, மைக்கல் தனது தாயின் அனுமதியின்றி பல்வேறு அடகுக் கடைகளில் நகைகளை அடகு வைத்து தனது கடனைச் செலுத்தினார். ஜூலை 5, 2021 அன்று, அவரது தாயார் தனது நகைகளில் பலவற்றைக் காணவில்லை என்பதைக் கண்டுபிடித்தார்.

இரண்டு நாள்களுக்குப் பிறகு அந்தத் தாயார் தன் மகனிடம் அது பற்றி கேட்டார். பின்னர் இந்தத் திருட்டு பற்றி காவல்துறையிடம் புகார் அளித்தார்.

மைக்கல் தான் திருடிய பணத்திலிருந்து $3,000ஐத் தன் தாயாரிடம் திரும்பக் கொடுத்து விட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

செப்டம்பர் 2, 2022 அன்று, மைக்கல் அதிகாலை 5 மணியளவில் ஆர்ச்சர்ட் டவர்ஸ் கடைத் தொகுதிக்கு அருகில் அதிக போதையில் இருந்த 33 வயது நபரை தனது டாக்சியில் ஏற்றிச் சென்றார்.

அந்தப் பயணி செல்லவேண்டிய இடம் வந்தபோது, அவர் போதையில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது மைக்கல் அந்த ஆடவர் அணிந்திருந்த $45,000 மதிக்கத்தக்க ரோலெக்ஸ் கைக்கடிகாரத்தைக் கையிலிருந்து கழற்றினார்.

அதற்கு அடுத்த மாதம், அவர் தனது டாக்சியில் தூங்கிய 44 வயது ஆண் பயணியிடமிருந்து கிட்டத்தட்ட $67,300 மதிப்புள்ள இரண்டாவது ரோலெக்ஸ் கைக்கடிகாரத்தைத் திருடினார்.

இரண்டு பயணிகளும் தங்களிடம் இருந்த விலைமதிப்புமிக்க கைக்கடிகாரம் காணாமல் போனதை அறிந்து காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

அவர்களின் கைக்கடிகாரங்கள் மீட்கப்படவில்லை, மேலும் பாதிக்கப்பட்ட இருவருக்கும் மைக்கல் எந்த இழப்பீடும் கொடுக்கவில்லை என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

ஜூன் 15, 2023 அன்று, மைக்கலின் டாக்சியில் ஏறிய 30 வயது இளைஞரிடமிருந்து சற்று நேரத்தில் தூங்கி விட்டார். பின்னர் அவர் அணிந்திருந்த $88,000 மதிப்புள்ள மூன்றாவது ரோலெக்ஸ் கைக்கடிகாரத்தை மைக்கல் திருடினார்.

காவல்துறையில் புகார் அளித்த பிறகு, கைக்கடிகாரம் மீட்கப்பட்டு பாதிக்கப்பட்டவரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

ஜூலை 30ஆம் தேதி, தற்காப்பு வழக்கறிஞர் வீ ஹாங் ஷெர்ன், மைக்கலுக்கு ஓர் ஆண்டு, மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்குமாறு நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.

“தமது கட்சிக்காரரான திரு மைக்கல் செய்த குற்றங்களுக்காக வருந்துகிறார். அவர் தனது தண்டனையை முடித்த பிறகு, முறையாக வேலை செய்து தனது மனைவி, மகளைக் காப்பாற்ற கடப்பாடு கொண்டுள்ளார்,” என்றும் திரு வீ மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்