தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெண்ணை மானபங்கப்படுத்திய இந்திய ஆடவருக்குச் சிறை, பிரம்படி

2 mins read
31ea8b9f-0735-42c1-94c9-eafb0b7793f2
படம்: - பிக்சா பே

டர்ஃப் கிளப் ரோடு உணவகத்திலிருந்து 21 வயதுப் பெண்ணை அருகிலிருந்த திடலுக்குத் தூக்கிச் சென்று மானபங்கப்படுத்திய ஆடவருக்குச் சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்பட்டுள்ளன.

எருகுல ஈஸ்வர ரெட்டி எனும் அந்த 25 வயது ஆடவர் இந்தியாவைச் சேர்ந்தவர். மாணவர் விசாவில் சிங்கப்பூரில் இருந்த அவர் பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணை மானபங்கப்படுத்தியதாகக் கூறப்பட்டது.

2022ஆம் ஆண்டு ஆகஸ்டு 20ஆம் தேதி நள்ளிரவுக்குப்பின் அந்தச் சம்பவம் நடைபெற்றது.

அன்று இரவு 11 மணியளவில் ஃபெஸ்டிவோ@மிஸ்டர் கேலப் உணவகத்தில் நண்பர்களுடன் மது அருந்திய அப்பெண் சற்றே தள்ளாடும் நிலையில் இருந்தார். இருப்பினும் அவரால் பிறர் உதவியின்றி நடக்க முடிந்தது. சுற்றுப்புறம் குறித்த விழிப்புணர்வும் அவருக்கு இருந்தது.

தனது ஆண் நண்பர் அங்கு வருவார் என்று எதிர்பார்த்த அப்பெண் அவருக்குக் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டுக் காத்திருந்தார்.

அவ்வேளையில் அவரை அணுகிய ரெட்டி, அந்தப் பெண் மறுத்ததைச் சட்டை செய்யாமல் அருகிலிருந்த திடலுக்குத் தூக்கிச் சென்று மானபங்கப்படுத்தினார்.

தோழியின் குறுஞ்செய்தியை அடுத்து அவரைத் தேடி வந்த ஆண் நண்பர், தொலைவில் ஒரு பெண்ணின் கூக்குரலைக் கேட்டார்.

அவரும் அவருக்கு உதவியாக வந்த சிலரும் ஆடைகளற்ற நிலையில் எருகுலவையும் அருகில் ஆடவரின் தோழியையும் கண்டனர்.

காலை 2 மணியளவில் காவல்துறைக்கு அவர் தகவல் தந்ததை அடுத்து ரெட்டி கைது செய்யப்பட்டார்.

ரெட்டி தன் மீது சுமத்தப்பட்ட மானபங்கக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். ஜனவரி 19ஆம் தேதி அவருக்கு நான்காண்டு சிறைத்தண்டனையுடன் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

மானபங்கக் குற்றத்திற்கு அவருக்கு ஈராண்டுகள் முதல் பத்து ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் பிரம்படிகளும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

குறிப்புச் சொற்கள்