கேலாங்கில் உள்ள உடற்பிடிப்பு நிலையம் ஒன்றில் தம்மிடம் பணம் இல்லாததைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட மறுத்த கட்டுமான ஊழியர் புரோதன் சஜிப், 27, உடற்பிடிப்புச் சேவை வழங்கும் பெண்ணை தமக்கு அடிபணிய வைக்க மூர்க்கத்தனமாக நடந்துகொண்டார்.
அப்பெண்ணின் நெஞ்சுப்பகுதி மீது அமர்ந்து, தம் இரு கைகளால் அவரை மூச்சுத்திணற வைத்து, பலமுறை அறைந்து, பாலியல் செயல் புரிய அந்த ஆடவர் வலுக்கட்டாயப்படுத்தினார்.
பங்ளாதேஷ் நாட்டவரான சஜிப்புக்கு திங்கட்கிழமை (நவம்பர் 11) 10 ஆண்டுச் சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. சீன நாட்டவரான அந்த 32 வயதுப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை புரிந்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.
2022 மே 18ஆம் தேதி காலை இந்த வன்செயல் நிகழ்ந்தது.
அன்றைய தினம் காலை 7.35 மணியளவில், கேலாங்கில் உள்ள கட்டுமானத் தளம் ஒன்றுக்கு சஜிப் வேலைக்குச் சென்றதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் மேக்சிமிலியன் சியூ உயர் நீதிமன்றத்தில் கூறினார். ஆனால், மளிகைப் பொருள் வாங்க சிறிது நேரத்தில் அவர் அங்கிருந்து புறப்பட்டார்.
காலை 7.55 மணியளவில், உடற்பிடிப்பு நிலையத்தில் அந்த சீனப் பெண் உறங்கிக்கொண்டு இருந்தபோது மணியோசை கேட்டது. வெளியே சஜிப் நின்றதைக் கண்ட அப்பெண், அவரை உள்ளே விட கண்ணாடிக் கதவைத் திறந்தார்.
தமக்கு உடற்பிடிப்புச் சேவை தேவை எனக் குறிப்பிட சஜிப்பிடம், அதற்கான செலவு குறித்து அப்பெண் கூறினார். ஆனால், அதற்கான பணம் சஜிப்பிடம் இல்லை.
தம் வங்கி அட்டையை வெளியில் எடுத்தும் அதை அப்பெண்ணிடம் வழங்க சஜிப் மறுத்தார். அதையடுத்து அவரை அப்பெண் புறப்படச் சொன்னார். ஆனால், அங்கிருந்து வெளியேற மறுத்த சஜிப், கண்ணாடிக் கதவைப் பூட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
தம் தோற்பட்டையில் அப்பெண்ணைத் தூக்கி, கதவிலிருந்து ஆகத் தொலைவில் இருந்த மெத்தையில் சஜிப் வீசினார். அவருடன் போராடிய அப்பெண், உதவி கேட்டு அலறினார்.
அப்பெண் மீது ஏறி அவரது கழுத்தை நெரிக்க முயன்ற சஜிப், அவரைக் கத்தவிடாமல் இருக்க அவரது முகத்தில் துண்டு ஒன்றை வைத்து அழுத்தினார்.
சற்று நேரம் கழித்து அத்துண்டை நீக்கிய சஜிப், அப்பெண்ணை சத்தம் போடாமல் இருக்கச் சொல்லி தம் உதட்டில் விரலை வைத்தார். தமக்கு ஒத்துழைக்காவிட்டால் அப்பெண்ணைக் கொன்றுவிடுவதாக அப்பெண்ணிடம் சஜிப் சைகை காட்டினார்.
தாம் தொடர்ந்து கத்தினால் அந்த ஆடவர் தம்மைக் கொன்றுவிடுவாரோ என்ற அச்சத்தில் அப்பெண் அமைதியானதாக வழக்கறிஞர் சியூ சொன்னார்.
அப்பெண்ணின் ஆடையை சஜிப் நீக்கியபோது, அவரைத் தள்ளிவிட்டு அப்பெண் ஓட்டம் பிடித்தார். ஆனால், அவரைத் தடுத்து நிறுத்திய சஜிப், அவரை தரையில் மடக்கிப் பிடித்தார். அவரை மூச்சுத்திணற வைத்து, பலமுறை அறைந்து, பாலியல் செயல் புரிய அந்த ஆடவர் கட்டாயப்படுத்தினார்.
இந்த வன்கொடுமைக்குப் பிறகு உடற்பிடிப்பு நிலையத்திலிருந்து அப்பெண் தப்பிக்க முயன்றபோதும், அவரை சஜிப் உள்ளிழுத்துவிட்டார்.
அங்கிருந்த மெத்தை ஒன்றின் காலைப் பிடித்த அப்பெண், மெத்தையில் இருந்த தம் கைப்பேசியை எடுத்தார். இதைக் கண்ட சஜிப், கைப்பேசியைப் பறிக்க அப்பெண்ணுடன் போராடினார்.
அப்பெண் ஒருவழியாக தம் கைப்பேசியை எடுத்துக்கொண்டு உடற்பிடிப்பு நிலையத்திலிருந்து வெளியேறிவிட்டார். அவர் உதவி கேட்க வெளியே நின்றபோது, நிலையத்திலிருந்து வெளியே வந்த சஜிப், அவரிடமிருந்து கைப்பேசியைப் பறிக்க தொடர்ந்து முயன்றார்.
ஆனால், கைப்பேசியைப் பிடுங்க முடியாமல் போனதும் நிலையத்தின் கதவைத் திறந்த சஜிப், அப்பெண்ணை உள்ளே செல்லும்படி சைகை காட்டினார்.
அந்நிலையத்திற்குள் விரைந்து அப்பெண் கதவை மூடியவுடன், சஜிப் அந்த இடத்திலிருந்து புறப்பட்டார்.
அடுத்த நாள் அதிகாலை அப்பெண் காவல்துறையிடம் புகார் அளித்தார். கண்காணிப்புக் கருவிகளில் பதிவான காட்சிகள் மூலம் சஜிப்பை அடையாளப்படுத்திய காவல்துறையினர், அதே நாள் அவரை வேலையிடத்தில் கைது செய்தனர்.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட சஜிப், இச்சம்பவத்துக்கு முன்னர் இரு மாதங்களாக பாலியல் உறவை மேம்படுத்தும் மருந்தை தாம் உட்கொண்டதாக மனநல மருத்துவர் ஒருவரிடம் கூறினார்.

