தஞ்சோங் பகாரில் உள்ள பாரம்பரிய சீன மருத்துவ மருந்தகத்தில் பெண் வாடிக்கையாளர் ஒருவரை மானபங்கம் செய்ததற்காக, அங்கு பணிபுரிந்த உடற்பிடிப்புச் சிகிச்சையாளருக்கு வெள்ளிக்கிழமை (மார்ச் 21) ஓராண்டுச் சிறைத் தண்டனையும் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
மலேசியரான 31 வயது டான் லோக் கியாங், மூன்று மானபங்கக் குற்றச்சாட்டுகளில் ஒன்றை முன்னதாக ஒப்புக்கொண்டார். அப்பெண்ணின் உடலின் மற்ற பகுதிகளைத் தொட்டது சம்பந்தப்பட்ட எஞ்சிய குற்றச்சாடுகள், அவருக்குத் தண்டனை விதிப்பதில் கருத்தில் கொள்ளப்பட்டன.
நீதிமன்ற உத்தரவு காரணமாக அப்பெண்ணின் வயது, பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.
2022 டிசம்பர் 22ஆம் தேதி, ஒரு மணி நேரம் உடற்பிடிப்புக்காக நண்பகல் வாக்கில் அப்பெண் அந்த மருந்தகத்திற்குச் சென்றிருந்தார்.
அவர் கேட்ட உடற்பிடிப்புச் சிகிச்சையாளர் அப்போது அங்கு இல்லாததால், அவருக்கு உடலைப் பிடித்துவிட டான் முன்வந்தார்.
உடற்பிடிப்பு அறையில் தமது ஆடையையும் உள்ளாடையையும் நீக்கிவிட்டு, வெள்ளை அரைகாற்சட்டையை அப்பெண் அணிந்துகொண்டார். பின்னர் சிகிச்சைப் படுக்கையில் அவர் குப்புறப் படுத்துக்கொண்டார். துண்டு ஒன்றால் தமது உடலை அப்பெண் மறைத்துக்கொண்டதைத் தொடர்ந்து, டான் அறைக்குள் நுழைந்தார்.
உடற்பிடிப்பு தொடங்கி அரை மணி நேரம் கழித்து, அரைகாற்சட்டையை நீக்குமாறு அப்பெண்ணிடம் கூறிவிட்டு, அறையிலிருந்து டான் வெளியேறினார்.
இதனால் அப்பெண் குழப்பமடைந்தாலும், டான் கூறியதற்கு இணங்கி தமது அரைகாற்சட்டையைக் கழற்றிவிட்டு, படுக்கையில் குப்புறப் படுத்துக்கொண்டார். இம்முறையும் துண்டால் தமது உடலை அவர் மறைத்துக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
பின்னர் உடற்பிடிப்பைத் தொடர்ந்த டான், திரும்பிப் படுக்குமாறு அப்பெண்ணிடம் கூறினார். அப்பெண்ணின் தொடை இடுக்குகளில் பிடித்துவிட்ட டான், குறைந்தது ஒருமுறையாவது அவரின் பிறப்புறுப்பைத் தொட்டார். இதனால் அப்பெண் அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தார்.
இச்சம்பவம் குறித்து அப்பெண் எப்படிப் புகார் அளித்தார் என்பது குறித்து நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.