2025, ஜூலை மாதத்தில், பீஷானில் நடந்த ஒரு சோதனையின்போது, அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற கேபாட் விற்பனையாளர் ஒருவரை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் படம்பிடித்தது. அவருக்கு செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 30), 16 மாதங்கள், ஐந்து வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
28 வயதான ஜோடன் சின் வெய் லியாங், எட்டோமிடேட் அடங்கிய 802 மின்சிகரெட் குப்பிகளை விற்பனைக்காக வைத்திருந்த, சுகாதார அறிவியல் ஆணைய (எச்எஸ்ஏ) அதிகாரிகளுக்குக் காயம் ஏற்படுத்தக்கூடிய ஒரு பொறுப்பற்ற செயலைச் செய்ததாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
சிறையிலிருந்து விடுதலையான பிறகு, அவருக்கு 18 மாதங்களுக்கு வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டது.
சின்னிடம் இருந்த மின்சிகரெட் குப்பிகளின் மொத்த சந்தை மதிப்பு $56,000க்கும் அதிகமாக இருக்கும். ஒவ்வொரு குப்பியின் மதிப்பு சுமார் $70.
அவருக்குத் தண்டனை வழங்கும்போது, துணை முதன்மை மாவட்ட நீதிபதி லூக் டான், சிங்கப்பூரில் பரவிவரும் மின்சிகரெட் பழக்கம் கவலையளிப்பதாகக் குறிப்பிட்டார்.
சின்னுக்கு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யாரும் முன்னிலையாகவில்லை. அதேசமயம் அரசுத்தரப்பு வழக்கறிஞர் குழுவில் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம், குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம், சுகாதார அறிவியல் ஆணையம் ஆகியவற்றின் சார்பில் வழக்கறிஞர்கள் முன்னிலையாகினர்.
உரிமம் இல்லாத கடன் வழங்குபவரிடம் தனக்கு இருந்த சுமார் $25,000 கடனைத் தீர்ப்பதற்காக, சின், 2025 ஜூன் முதல் மின்சிகரெட் குப்பிகளை விற்கத் தொடங்கினார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சின், ஒரு தீவிர வணிக விநியோகிப்பாளராக இருந்து, இளையர்கள் பலருக்கு மின்சிகரெட் குப்பிகளை நேரடியாகக் கொண்டு சேர்த்தார் என்பதை தண்டனை வழங்கும்போது நீதிபதி சுட்டிக்காட்டினார்.

