செயற்கை நுண்ணறிவு கொண்ட முதலீட்டு மென்பொருள் மூலம் நல்ல லாபத்தை ஈட்டித்தருவதாகக் கூறி ஆடவர் ஒருவர் 122,000 வெள்ளிக்கு மேல் மோசடி செய்துள்ளார்.
ஜோஷ் ஜூவாங் ஜீஹூ என்ற அந்த 24 வயது ஆடவர், 14 பேரிடம் நிதியை வாங்கி ஏமாற்றியுள்ளார்.
ஜோஷ் மீது மோசடி உள்ளிட்ட ஏழுக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவற்றை அவர் ஒப்புக்கொண்டதையடுத்து ஆடவருக்கு புதன்கிழமையன்று (பிப்ரவரி 5) ஓர் ஆண்டு 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஆடவர் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஏமாற்று வேலையில் ஈடுபட்டார்.
ஜோஷ் தமக்கு முதலீடுகளில் நல்ல அனுபவம் உள்ளதாகக் கூறியுள்ளார், ஆனால் விசாரணையில் அவருக்கு முதலீடு குறித்து ஒன்றும் தெரியாது என்பதை அதிகாரிகள் அறிந்தனர்.
மோசடி மூலம் பெறப்பட்ட பணத்தை ஜோஷ் தமது சொந்த செலவுகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

