முதலீட்டாளர்களிடம் வாங்கிய தொகையைத் தமது சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்திய ஆடவருக்கு நான்கு ஆண்டுகள் மற்றும் 11 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மதர்சா மரைக்கார் முகமது பகருதீன் என்ற 48 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசி முதலீட்டாளர்களின் பணத்தைக் கொண்டு தமது கடன்களை அடைத்துள்ளார்.
2017ஆம் ஆண்டு தமது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் 3 விழுக்காடு வரையிலான வட்டி தருவதாகப் பகருதீன் கூறியுள்ளார்.
இதையடுத்து நான்கு முதலீட்டாளர்கள் 865,000 வெள்ளியை ஆடவரின் நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
2018ஆம் ஆண்டு தமது மற்றொரு நிறுவனமான நாணய மாற்றும் நிறுவனத்தில் இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து பகருதீன் முதலீட்டாளர்களின் பணத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார்.
மேலும் தமது தொழில் நண்பரான ஃபரூக் என்பவரையும் பகருதீன் மோசடி செய்துள்ளார்.
ஃபரூக் சொத்து மற்றும் வாகனங்களை விற்பனை செய்பவர். ஃபரூக் சொத்து வாங்கக் கொடுத்த 2.9 மில்லியன் வெள்ளியில் 500,000 வெள்ளியைக் கடன் அடைக்கப் பகருதீன் பயன்படுத்திக்கொண்டார்.
பகருதீன்மீது சந்தேகமடைந்த ஃபரூக் தமது பணத்தைக் கேட்டபோது 2.4 மில்லியன் வெள்ளி மட்டுமே கிடைத்தது. இதையடுத்து அவர் காவல்துறையில் புகார் கொடுத்தார்.
தொடர்புடைய செய்திகள்
விசாரணையில் முதலீட்டாளர்கள் பணம் மலேசியாவில் திருட்டுப்போனதாகப் பகருதீன் பொய்யுரைத்தார்.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைப் பகரூதீன் ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்குச் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) தண்டனை விதிக்கப்பட்டது.

