உடற்பிடிப்பு நாற்காலி சம்பந்தப்பட்ட முதலீட்டுத் திட்டம் இருப்பதாகக் கூறி தம் உறவினர் உட்பட பலரை ஏமாற்றிய ஆடவருக்கு 14 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நால்வரிடமிருந்து $78,000க்குமேல் ஏமாற்றிய முகம்மது ஷஹ்ரிஸான் ஜொஹாரி, 43, வெள்ளிக்கிழமை (ஜூன் 13) இரண்டு மோசடிக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
அவர் ஏமாற்றிய தொகையில், $57,370 அவருடைய உறவினரிடமிருந்து பெறப்பட்டது.
சூதாட்டப் பழக்கத்தாலும் வெவ்வேறு கடன்களாலும் ஏறக்குறைய $50,000 கடன்சுமை ஏற்பட்டதால், ஷஹ்ரிஸான் இக்குற்றங்களைப் புரிந்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜொயெல் லோய் நீதிமன்றத்தில் கூறினார்.
ஒகாவா உடற்பிடிப்பு நாற்காலிகள், ‘ரிச்சர்ட்’ எனும் பெயருடைய ஒரு முதலீட்டுப் பங்காளி குறித்து தம்மிடம் ஒரு முதலீட்டு வாய்ப்பு இருந்ததாக 2021 செப்டம்பரில் தம் உறவினரிடம் ஷஹ்ரிஸான் சொல்லியிருந்தார்.
லாபம் ஈட்டும் இத்திட்டம் 40 நாள்களுக்கு ஒருமுறை ஒரு தொகை வழங்கும் என்று அவர் பொய்க் கூறினார்.
ஒகாவா அல்லது ‘ரிச்சர்ட்’டுடன் அப்போது ஷஹ்ரிஸானுக்கு கொடுக்கல் வாங்கல் எதுவும் இல்லை என்றாலும், தமது கடனை எப்படியாவது திருப்பிச் செலுத்திவிட வேண்டும் என்பதற்காக தம் உறவினரை அவர் ஏமாற்றியதாக வழக்கறிஞர் லோய் சொன்னார்.
தமது முதலீடுகள் மூலம் ஆதாயம் எதையும் பெறாததால் ஷஹ்ரிஸானின் உறவினருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. எனினும், தாமதத்துக்கு ஷஹ்ரிஸான் சாக்கு போக்கு கூறி வந்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஷஹ்ரிஸான் தம் உறவினர் என்பதால், பாதிக்கப்பட்டவர் தொடக்கத்தில் இதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், 2023 செப்டம்பரில் காவல்துறையிடம் அவர் ஒருவழியாக புகார் அளித்தார்.