பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் தென்கொரியாவிலிருந்து சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த ஸ்கூட் விமானம் ஒன்றில் பெண் பயணி ஒருவர் விலையுயர்ந்த கைப்பை வைத்திருந்ததைக் கவனித்த சீன நாட்டவரான ஸாங் யூச்சி, 30, அதிலிருந்த உடைமைகளைப் பார்க்க முற்பட்டார்.
விமானம் தரையிறங்குமுன், தலைக்கு மேல் உள்ள அடுக்கிலிருந்து அந்தக் கைப்பையை எடுத்துப் பார்த்த அவர், அதிலிருந்த US$885 ($1,180) ரொக்கப் பணத்தை எடுத்துக்கொண்டார்.
அந்தக் கைப்பையை எடுத்த இடத்தில் திரும்ப வைக்க முற்பட்டபோது அவர் பிடிபட்டார்.
விமானப் பயணியிடமிருந்து திருடிய குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, ஸாங்கிற்கு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) எட்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
வட்டாரத்தில் மற்ற நாட்டு விமானங்களில் நிலவும் திருட்டுச் சம்பவங்களுடன் ஒப்பிடும்போது, சிங்கப்பூர் விமானங்களில் இந்த எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், திருடுவதால் விதிக்கப்படும் தண்டனை குறித்து மற்றவர்களை எச்சரிக்க கடுமையான தண்டனை தேவை என மாவட்ட நீதிபதி கூ ஸி ஸுவான் தெரிவித்துள்ளார்.
“பேராசையால் திருடும் எண்ணம் கொண்டவர்களைத் தடுப்பதற்கு மட்டுமன்றி, சிங்கப்பூர் விமானங்களைக் குறிவைப்பதிலிருந்து குற்றக் கும்பல்களைத் தடுக்கவும் நீதிமன்றம் போதுமான அளவுக்குக் கடுமையான தண்டனை விதிக்க வேண்டியுள்ளது,” என்று நீதிபதி கூ விளக்கினார்.
திருட்டு நிகழ்ந்தபோது சுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்துவந்த ஸாங், பிப்ரவரி 4ஆம் தேதி ஜேஜு - சிங்கப்பூர் ஸ்கூட் விமானத்தில் ஏறியதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
பணம் எடுத்ததை முதலில் ஏற்க மறுத்த ஸாங், சீனாவில் கடனை அடைக்க தாம் பணத்தைத் திருடியதாகப் பின்னர் ஒப்புக்கொண்டார். அதே நாளில் அவர் கைது செய்யப்பட்டார்.