நினைவாற்றலை இழந்த முதியவரைப் பராமரிப்பதால் ஏற்பட்ட விரக்தியில் இல்லப் பராமரிப்பாளர் ஒருவர் அந்த முதியவரை அடிக்கடி முறையின்றிக் கையாண்டதுடன் அவரைப் பலமுறை அடித்தும் உள்ளார்.
‘அல்ஷைமர்’ எனப்படும் கடுமையான மறதி நோயால் அவதிப்பட்டு வந்த முதியவர் தம்மைக் காயப்படுத்தியதைச் சரியாக நினைவுகூர்ந்து சொல்ல முடியாத நிலையில் இருந்தார். அதுபற்றி அவரால் புகார் அளிக்கவும் முடியாத நிலை.
அவருடைய செயல்களுக்கு எவ்விதக் கண்டிப்போ தண்டனையோ இல்லாத நிலையில், மியன்மார் நாட்டைச் சேர்ந்த தாண்ட் ஸின் ஊ, பாதிக்கப்பட்ட முதியவர் மறதி நோயால் அவதிப்பட்டதால் தான் தப்பித்து விடலாம் என எண்ணியதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) தாண்ட் ஸின் ஊ என்ற அந்தப் பராமரிப்பாளர் வேண்டுமென்றே காயம் விளைவித்த மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு 12 மாதம், நான்கு வாரச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அவருக்கு எதிரான தண்டனை விதிப்பின்போது மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.
பராமரிப்பாளர் தாண்ட் ஸின் ஊ என்பவரின் செயல்கள் பொதுமக்களிடையே கடுமையான மன அமைதியின்மையை ஏற்படுத்தும் என்று கூறிய நீதிபதி சலினா இஷாக், இதுபோன்ற குற்றங்கள் இனியும் நிகழாமல் தடுக்க கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டியுள்ளதாகக் கூறினார்.
2024 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் துன்புறுத்தல் சம்பவங்கள் நிகழ்ந்தபோது, பாதிக்கப்பட்டவருக்கு வயது 82. வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் மற்ற வாடகைதாரர்களுடன் அவர் வசித்து வந்தார்.
அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள அவருக்குச் சிரமம் நிலவியதால், அவரைப் பார்த்துக்கொள்ள அவருடைய மகன் தாண்ட் ஸின் ஊவை வேலைக்கு எடுத்தார்.

